தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூற செல்கிறேன்; நடிகர் ரஜினிகாந்த்..!


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 100வது நாள் நடந்த ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பொதுமக்களின் பேரணியில் வன்முறை வெடித்தது. தொடர்ந்து கலகக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்தபின் அங்கு சென்று அமைச்சர் கடம்பூர் ராஜு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயகுமார் ஆகியோரும் தூத்துக்குடி சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் இன்று அங்கு செல்கிறார்.

தூத்துக்குடிக்கு புறப்படும் முன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்கள் முன் பேசிய அவர், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறேன் என கூறியுள்ளார். நடிகர் என்ற முறையில் என்னை காணும் இந்த சூழலில் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விசாரணைக்கு பின் உண்மை வெளிவரும். அ.தி.மு.க.வை, தி.மு.க.வும், தி.மு.க.வை அ.தி.மு.க.வும் விமர்சிப்பது அரசியல் என்றார்.

வன்முறைக்கு தி.மு.க.வே காரணம் என முதல் அமைச்சர் கூறியது பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எப்பொழுதும் கடந்த காலம் பற்றியே பேசுவது சரியல்ல. பழைய நிகழ்வுகளை பற்றி பேசுவதில் எந்த பயனும் இல்லை என கூறினார்.

தொடர்ந்து சட்டப்பேரவையை தி.மு.க. புறக்கணித்தது பற்றிய கேள்விக்கு பதில்கூற விரும்பவில்லை என்று கூறிய அவர், கர்நாடகாவில் காலா படத்திற்கு விதிக்கப்பட்ட தடை பற்றி திரைப்பட வர்த்தக சபை முடிவு எடுக்கும் என்றார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!