தூத்துக்குடியில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் ,குழந்தைகளை அடித்து உதைத்த போலீசார்..!


தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த போலீசார் அங்கிருப்பவர்களை அடித்து இழுத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் 100-வது நாளின்போது தூத்துக்குடியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. போலீசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவை எரிக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலகம் சூறையாடப்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனையின் முன்பு உறவிகனர்கள் சூழ்ந்திருந்தனர். அப்போது அவர்களை போலீசார் கலைந்து போக கூறினார்கள். அப்போது போலீசாருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் போலீஸ் தடியடி நடைபெற்றது. தூத்துக்குடி அண்ணாநகரில் உள்ள போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர் அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் செல்வகணேஷ் என்பவர் அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே தூத்துக்குடி, திருநெலவேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவையை தமிழ்நாடு அரசு முடக்கியது. இந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வீடுகளுக்குள் புகுந்து வீட்டிலுள்ளவர்களை அடித்து இழுத்துச் செல்லும் சம்பவமும் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கிராமங்களில் காவல் துறையினர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாகவும் அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர்.

வீடுகளுக்குள் புகுந்த போலீசார், பெண்கள், சிறுவர்கள் என அனைவரையும் அடித்து அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 5 நாட்களுக்குள் இணையம், வாட்ஸ் அப் போன்ற தகவல் பரிமாற்றம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அப்போது, காவல் துறையிடம் போலீசார் வாக்குவாதம் செய்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற கலவரத்தின்போது காவல் துறையைச் சேர்ந்தவர்களே சில இடங்களில் தீவைத்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!