கர்நாடக அரசியலில் புது திருப்பம்… முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா..!


கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.

அதன்படி இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, பா.ஜ.க.வின் இறுதிக்கட்ட குதிரை பேரம் குறித்து சர்ச்சை கிளப்பிய காங்கிரஸ், எடியூரப்பா சம்பந்தப்பட்ட ஆடியோவை வெளியிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாட்டீலை தொடர்பு கொள்ளும் எடியூரப்பா, அவரிடம் அமைச்சர் பதவி தருவதாக பேசுகிறார்.

காங்கிரசின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அக்கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் காலை அமர்வில் பங்கேற்கவில்லை. அவர்களை பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது பிடியில் வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இதுபோன்ற சூழ்நிலையில் வாக்கெடுப்பின்போது அணிமாறி வாக்களிப்பார்களா? என்ற சந்தேகம் பா.ஜ.க. தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மெஜாரிட்டிக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்பது தெரிய வந்தால் உடனே ராஜினாமா செய்யும்படி எடியூரப்பாவுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. எனவே, வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் எடியூரப்பா ராஜினாமா செய்யலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா, 13 பக்கங்கள் கொண்ட உணர்ச்சிமிகு உரையை தயார் செய்தார். பிற்பகல் 3.30 மணிக்கு சட்டமன்றம் மீண்டும் கூடியபோது, மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். அதன்பின்னர் எடியூரப்பா தனது உரையை வாசித்தார்.

அப்போது உணர்ச்சிப்பெருக்குடன் தனது உரையை நிறைவு செய்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!