கர்நாடக அரசியலில் பரபரப்பு – காங். எம்எல்ஏக்களுக்கு சொகுசு விடுதி தயார்..!


கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், குமாரசாமி மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா இன்று மாலை 4 மணிக்கு கவர்னரை சந்திக்க உள்ளனர். அப்போது, ஆட்சியமைக்க தேவையான போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுக்க உள்ளனர்.

இதற்கு ஏதுவாக, மஜத மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. ஒருவேளை எடியூரப்பாவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதால் காங்கிரஸ் பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!