பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை – குமாரசாமி அதிரடி..!


கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த சனிக்கிழமை (மே 12) தேர்தல் நடைபெற்றது. இதில், நேற்று (செவ்வாயக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு, வட போச்சே நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி திக்குமுக்காடச் செய்துள்ளன.

மும்முனைப்போட்டி நிலவிய கர்நாடகத்தில், போட்டியிட்ட பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதில் பாஜக 104 தொகுதிகளையும், காங்கிரஸ் 78 தொகுதிகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ்வாதி, சுயேட்சை, கர்நாடக பிரக்ஞவந்த ஜனதா கட்சி ஆகியவை தலா 1 தொகுதிகள் வீதம் கைப்பற்றியுள்ளன.

ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவையான நிலையில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே ஆட்டம் சூடுபிடித்துள்ளது.

அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ள பாஜக ஒருபுறம் நான்தான் ஆட்சியைப்பிடிப்பேன் என்றும், கூட்டணி வைத்தாவது பாஜகவை வீழ்த்துவோம் என்றும் காங்கிரஸ் முனைப்பு காட்டிவரும் நிலையில் தேர்தல் முடிவுக்கு பின் பெரும் பரபரப்புக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன.

இதனிடையே காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க தயாராகியுள்ளது. அதனை உறுதி செய்யும் பொருட்டு கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும் ஏற்கனவே முடிவு செய்தது போல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மூன்று கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் தனித்தனியே ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!