அதிசய பலா மரத்தில் கொத்துக்கொத்தாக தொங்கும் பழங்கள் – பண்ருட்டியில் விசித்திரம்..!


பண்ருட்டியில் ‘ஆயிரம் காய்ச்சி’ என்று அழைக்கப்படும் அதிசய பலாமரம் காய்த்துள்ளது. கொத்துக்கொத்தாக தொங்கும் பழங்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகளாகும். முக்கனியில் 2-வது இடத்தை பிடித்திருப்பது பலாப்பழம். தித்திக்கும் தேன் சுவை இதன் தனிச்சிறப்பு ஆகும். மேல்தோல் கரடு முரடாக காட்சி அளித்தாலும் உள்ளே இருக்கும் சுளைகள் தித்திக்கும் தேன் சுவையோடு இருப்பதால் மற்ற பழங்களை காட்டிலும் இதற்கு மவுசு அதிகம்.

ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப்பழத்துக்கு பெயர் பெற்றது பண்ருட்டிதான். செம்மண் பாங்கான பூமியில் 800-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் பலா பயிரிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் பலாப்பழ சீசன் ஆகும். தற்போது பண்ருட்டியில் பலாப்பழம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாதபோதிலும் பலா மரங்களில் அதிகளவு காய்கள் பிடித்திருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

பலாப்பழம் விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சீசன் தொடங்கிய நாள் முதல் சென்னை-கும்பகோணம் சாலையோரத்தில் பண்ருட்டியில் இருந்து நெய்வேலி வரை தற்காலிக கடைகள் முளைத்துள்ளதை காணமுடிகிறது. அதில் பலாப்பழமும், முந்திரியும் விற்பனை செய்யப்படுகிறது. பலாப்பழத்தின் அளவுக்கு தகுந்தார்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒரு பலாப்பழம் 100 ரூபாயில் இருந்து 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் பலாப்பழங்கள் சென்னை, சேலம், மதுரை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. பலாப்பழ மரங்கள் இருந்தாலும் கூட, ஏதாவது ஒரு மரத்திற்கு சிறப்பு இருக்கும் அல்லவா. ஆம் பண்ருட்டி பகுதியிலும் ஒரு பலாமரத்திற்கு தனிச்சிறப்பு உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு பலா மரம் ஆயிரம் பிஞ்சு விடுகிறது. தானே புயல் தாக்கிய போதும் விழாமல் நிலைத்து நிற்கிறது. அது பற்றிய விவரம் வருமாறு:-


பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் மா, பலா, முந்திரி, கொய்யா, புளி உள்ளிட்ட மரங்களை பராமரித்து வருகிறார். அந்த தோட்டத்தில் ஒரே ஒரு பலா மரம் மட்டும் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். இது குறித்து ராமசாமி கூறுகையில், இந்த தோப்பு எங்களது பரம்பரை சொத்தாகும். எனது மூதாதையர்கள் நட்டு வைத்த ஒரே ஒரு பலா மரம் இன்றும் நிற்கிறது. அது நடப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பிறகுதான் காய்பிடிக்க ஆரம்பித்ததாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆயிரம் பிஞ்சுகளை விடும். அதில் 350 பிஞ்சுகளை மட்டுமே காயாக மாற விடுவோம். மற்றவைகளை துண்டித்து விடுவோம். ஏனெனில் எல்லா பிஞ்சுகளையும் விட்டால் பருமன் குறைந்து விடும். இந்த மரத்தில் காய்க்கும் பழத்தின் சுவை, மற்றவைகளை விட இரு மடங்கு அதிக சுவை உடையதாகும். ஒரு பழம் 10 கிலோ முதல் 80 கிலோ எடை வரை இருக்கும்.

கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயல் கடலூர் மாவட்டத்தையே புரட்டிப்போட்டது. அதில் பண்ருட்டி பகுதியில் பெரும்பாலான பலா, முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன. 200 ஆண்டுகள் பழமையான இந்த பலா மரமும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்த இலைகளை இழந்து, மொட்டையாக காட்சி அளித்தது. வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி அந்த மரத்தை பராமரித்தேன். ஆனால் தானே புயலுக்கு பிறகு 3 ஆண்டுகள் அந்த மரம் காய்க்கவில்லை. அதன்பிறகு மீண்டும் அந்த மரம் காய்க்க தொடங்கியது. இந்த ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஞ்சு விட்டது. அதில் 350 பிஞ்சுகளை மட்டும் விட்டோம். மற்றவைகளை துண்டித்து விட்டோம். இதுவரை 120 பழங்களை அறுவடை செய்துள்ளோம் என்றார்.

ஆண்டுதோறும் ஆயிரம் பிஞ்சுகளை விடும் என்பதால், ‘ஆயிரம் காய்ச்சி மரம்’ என்று அழைக்கப்படுகிறது. தானே புயலை வென்ற பலாமரம் காய்த்து தொங்குவதை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!