மரப்பாலத்தில் புகைப்படம் எடுத்த போது ஆற்றில் மூழ்கி மருத்துவ மாணவர்கள் 7 பேர் மரணம்..!


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு என்கிற மாவட்டம் உள்ளது. இங்கு மிகப்பெரிய ஆறு ஓடுகிறது.

இந்த ஆற்றை மக்கள் கடந்து செல்வதற்காக ஆற்றின் நடுவே மரத்தினாலான தொங்கு பாலம் இருந்தது. தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இந்த பாலத்தில் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே செல்ல முடியும்.

இதுதொடர்பாக அங்கு எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் இதனை பொருட்படுத்தாமல் மரப்பாலத்தில் கூட்டம் கூட்டமாக செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இந்நிலையில், பைசலாபாத் மற்றும் லாகூரில் இருந்து 2 தனியார் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று நீலம் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.

அப்போது அவர்கள் அனைவரும் ஆற்றின் நடுவே இருந்த மரப்பாலத்தில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். திடீரென அந்த மரப்பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. இதில் பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ராணுவவீரர்கள் மீட்பு குழுவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்பு குழுவினர் ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர். எனினும் 7 மாணவர்களை பிணமாக தான் மீட்க முடிந்தது.

11 மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 9 மாணவர்களை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை மீட்பதற்கான முழு முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!