தமிழுக்கு இப்படியொரு மரியாதையா..? சிங்கப்பூர் அரசு அதிரடி உத்தரவு..!


சிங்கப்பூரில் தமிழ் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கும் என அந்நாட்டு அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தமிழ்மொழிக்கு முழுமையான ஆதரவு அளிப்பதில் அரசு கொள்கையாக வகுத்துள்ளது என்றும், இந்த நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தினர், குறிப்பாக இளைஞர்களிடம் தமிழ்மொழியை கொண்டு சேர்த்து, அன்றாட வாழ்க்கையில், பயன்பாட்டு மொழியாக்கி உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசு உறுதி பூண்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாகும். அத்தகைய மரியாதையை அந்நாட்டில் தமிழ்மொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளிலும் தமிழ் தாய்மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது.

அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகளிலும் தமிழ்மொழி அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரின் கரன்சியிலும் ஆங்கிலம், சீனா, மலேய் ஆகிய மொழிகளோடு தமிழ்மொழியும் அச்சிடப்பட்டுள்ளது.

“சிங்கப்பூரை நவீனமாக்கிய தமிழ்சமூகத்தினர்” என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடந்தது. இந்த நூலை சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். இந்த நூலை வெளிநாடு வாழ் இந்தியர் சவுந்திர நாயகி வைரவன் எழுதியுள்ளார்.

இந்த நூல் வெளியிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஈஸ்வரன் பேசும்போது, சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு தீர்மானம் கொண்டுள்ளது என தெரிவித்தார்..

அதனால்தான் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகவும் பள்ளிக்கூடங்களிலும் பயிற்று மொழியாகவும் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கு முழுமையான ஆதரவு அளிப்பதில் அரசு கொள்கையாக வகுத்துள்ளது. இந்த நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தினர், குறிப்பாக இளைஞர்களிடம் தமிழ்மொழியை கொண்டு சேர்த்து, அன்றாட வாழ்க்கையில், பயன்பாட்டு மொழியாக்கி உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்..

தமிழ்மொழியை பரப்புவதற்கும், தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றவும் இளைய சமூகத்தினரிடம், விழிப்புணர்வையும், அவர்களின் பங்களிப்பையும் அதிகப்படுத்த வேண்டும். அதற்காக தமிழ்மொழித் திருவிழாவை நடத்த வேண்டும் எனவும் ஈஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் சிங்கப்பூர் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்தது. அந்த வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது. இதன் காரணமாகவே, சிங்க்பபூரின் அதிபராக செல்லப்பன் ராமநாதன் என்ற எஸ்ஆர் நாதன் 1999-ம் ஆண்டு முதல் 2011 ஆகஸ்ட் 31-ம் தேதிவரை அதிபராக பதவி வகிக்க முடிந்தது. மேலும், இன்றும் சிங்கப்பூரிலும் என்னற்ற தமிழர்கள் அரசுப்பதவிகளிலும், அமைச்சர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!