2020-ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்- மைத்திரி அதிரடி அறிவிப்பு..!


இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை தோற்கடித்து மைத்ரி பால சிறிசேனா அமோக வெற்றி பெற்றார்.

அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும், பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளன. இந்த அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே மட்டக் களப்பில் இலங்கை சுதந்திரா கட்சியின் மே தின விழா பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘கடந்த 3 ஆண்டுகளாக நேர்மையான அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறேன். பல நல்ல திட்டங்கள் தீட்டப்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. எங்களது கூட்டணி அரசு மீதமுள்ள பதவி காலத்தை வெற்றிகரமாக முடிக்கும்.

நான் வருகிற 2020-ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதில்லை. இன்னும் நிறைய பணிகளை முடிக்க வேண்டியுள்ளது’’ என்றார்.

2015-ம் ஆண்டு பதவி ஏற்றபோது இந்த ஒரு தடவைதான் அதிபராக இருப்பேன் என உறுதி அளித்தார். மேலும் அதற்கான சட்டமும் கொண்டு வந்தார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் இந்த முடிவை பரிசீலிக்கும் படி வலியுறுத்தினர்.

எனவே 2021-ம் ஆண்டு வரை அவர் அதிபராக தொடர முடியுமா? என சுப்ரீம் கோர்ட்டிடம் கருத்து கேட்டார். ஆனால் அவர் 5 ஆண்டுகள் மட்டுமே அதிபராக தொடர முடியும் என கோர்ட்டு தெரிவித்தது. ஆகவே இவரது பதவிக் காலம் 2020-ம் ஆண்டுடன் முடிகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!