புதிய சிம் கார்டுகளை வாங்க ஆதார் கட்டாயமில்லை- மத்திய அரசு உத்தரவு..!


மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெறுவதற்கும், பல்வேறு சேவைகளுக்கும், பயன்பாட்டுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்ற சூழ்நிலை தற்போது உள்ளது.

ஆதார் கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது. செல்போன் சிம்கார்டுகள் வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.

ஆதார் நகல் அளிக்காதவர்களுக்கு சிம்கார்டு மறுக்கப்பட்டதாக கடந்த 27-ந்தேதி புகார் எழுந்தது.

இதனையடுத்து வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்க தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி செல்போன் சிம்கார்டுக்காக ஆதார் அட்டையை வாடிக்கையாளர்களிடம் கட்டாயபடுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் கார்டு அளிக்காவிட்டாலும் சிம்கார்டு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பாக தொலைதொடர்பு துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியதாவது:-

செல்போன் சிம்கார்டு வாங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை. ஆதாருக்கு பதிலாக ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று செல்போன் நெட்வொர்க், நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்குமாறு பல்வேறு செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் எற்கனவே கட்டாயப்படுத்துவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். தற்போது ஆதார் கட்டாயமில்லை என்ற தகவல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!