இங்கெல்லாம் நீ வரக் கூடாது… வெளியே செல் – கோயிலிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பெண்..!


புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ளது கூனிச்சம்பட்டு கிராமம். இங்குள்ள திரவுபதிஅம்மன் கோவிலில் சித்திரை மாத தீமிதி திருவிழா கடந்த 15 நாட்களாக நடந்து வருகிறது. தினமும் இரவில் மின் விளக்கு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திரவுபதி அம்மன் -அர்ச்சுனன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு சாமி தரிசனம் செய்வதற்காக அதே ஊரைச் சேர்ந்த ராதா (வயது30) என்ற பெண் வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த பெண்ணை கோவிலில் இருந்த ஒரு சிலர் உள்ளே வந்து சாமி கும்பிட கூடாது என தடுத்து நிறுத்தினர்.

இதனால் வேதனை அடைந்த ராதா அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாமியின் திருக்கல்யாணத்தை பார்த்தாலாவது தனக்கு திருமணம் கைகூடி வரும் என வந்தேன் ஆனால் ஏன் என்னை தடுக்கிறீர்கள் என கேட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக சிலர் பேசினார். இதனால் இரு தரப்புக்கும் மோதல் முற்றிய நிலையில் ராதாவை எதிர் தரப்பினர் மிரட்டி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்த சம்பவத்தை ஒரு வாலிபர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலை தளங்களில் பதிவிட்டார். அந்த படம் வைரலாக பலருக்கும் பரவி வருகிறது.


இந்த சம்பவம் குறித்து கோவில் தரப்பைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, ‘20 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையறாக்கள் சேர்ந்து உபயம் செய்வார்கள். 15-ம் நாள் திருவிழாவை ஒரு குடும்ப வகையறாக்கள் செய்தனர். அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தினோம். அப்போது உபயதாரர்கள் தான் முதலில் படைப்போம். அதன்பிறகே மற்றவர்களை படைக்க அனுமதிப்போம். அப்போது இந்த பெண் கற்பூரம் ஏற்றப்போகிறேன் என்றார். உபயதாரர்கள் ஏற்றிய பிறகு சாமி கும்பிடலாம் என்று சொன்னோம் வேறு எதுவும் இல்லை என தெரிவித்தனர்.

கோவிலுக்குள் செல்ல பெண்ணுக்கு அனுமதி மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து திருக்கனூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திரவுபதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்து இருப்பது சாதிய தீண்டாமை கொடுமை ஆகும். இதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். புதுச்சேரி மாநிலத்தில் சமீப காலமாக சாதிய அடக்குமுறை தலை தூக்குவதை கண்டிக்கிறோம்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் நடந்தது கிராமப்பகுதி என்பதால் இந்த பிரச்சினையை மையப்படுத்தி அப்பாவி மக்களுக்குள் எந்த சாதி பிரச்சினையும் எழாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலங்களில் இவ்வாறான பிரச்சினை வராமல் இருக்க தவறு செய்தவர்களை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!