6-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி ஆசிரியருக்கு அதிரடி தண்டனை..!


புதுவை மாநிலம் நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் சிவனேசன் (வயது 42). காரைக்கால் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 4-8-16 அன்று, ஆசிரியர் ஓய்வறையில் தனியாக இருந்தபோது, அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை நைசாக அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதை பெற்றோரிடம் சொன்னால் அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆசிரியரின் மிரட்டலுக்கு பயந்துபோன மாணவி, தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறாமல் இருந்தார்.

இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியை, சிகிச்சைக்காக அவளது பெற்றோர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். மாணவியை பரிசோதித்த டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி அவளது பெற்றோரிடம் கூறினார். இதுபற்றி திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் ஆசிரியர் சிவனேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி சிவகடாச்சம், குற்றம்சாட்டப்பட்ட சிவனேசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!