பெற்றோர்களே அவதானம் – எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் மரணம்..!


சென்னை கொருக்குப் பேட்டையை சேர்ந்தவர் சுனில்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு நவீன்கண்ணா (வயது 10), சீதா உள்ளிட்ட 3 குழந்தைகள் உள்ளனர். நவீன் கண்ணா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 10-ந் தேதி சுனில் குமார் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு வணிக வளாகத்துக்கு சென்றார்.

அவர்கள் முதல் தளத்தில் இருந்து 2-வது தளத்துக்கு எஸ்கலேட்டரில் ஏறிக் கொண்டிருந்தனர். நவீன் கண்ணா தனது சகோதரி கீதாவின் கையை பிடித்துக் கொண்டு ஏறினான். எஸ்கலேட்டர் 2-வது தளத்தை நெருங்கிய போது நவீன் கண்ணா முதுகில் மாட்டி இருந்த ஸ்கூல்பேக் எஸ்க லேட்டரின் கைப்பிடியில் சிக்கியது. இதனால் அவன் தரை தளத்தில் தூக்கி வீசப்பட்டான்.

சுமார் 25 அடி உயரத்தில் இருந்து வீசப்பட்டதால் சிறுவன் நவீன் கண்ணா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். வணிக வளாகத்தில் நின்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை நவீன் கண்ணா பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து சிறுவனின் தந்தை சுனில்குமார் அணணா சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக தனது மகன் எஸ்கலேட்டரில் சிக்கி பலியாகி விட்டதாக கூறி இருந்தார்.

இது தொடர்பாக வணிக வளாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. சிறுவன் உயிரை பலிவாங்கிய எஸ்கலேட்டரை கவனிக்கும் பொறுப்பு யாருடையது என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். கவனக்குறைவாக செயல்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சிறுவன் தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!