குரங்குகள் வெந்நீரில் குளிப்பது.. குளிருக்காக மட்டுமல்ல.. – ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்..!


குரங்கின் மொழி இங்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

“இன்னிக்கு கொஞ்சம் குளிர் அதிகமா இருக்குல்ல?”

“ஐயையோ…கொஞ்சமா??? ரொம்பவே அதிகமா இருக்கு.”

“எனக்கு முதுகு ரொம்ப அரிக்குது. கொஞ்சம் பாறேன்…”

“எனக்கு தலையில் நீ பேன் பார்க்குறதா இருந்தா, இந்த உதவிய நான் உனக்கு செய்றேன்”

“சரி… நான் செய்றேன். முத எனக்குக் கொஞ்சம் உதவி பண்ணு…”

“சரி… பண்றேன். ஆனா, வா முதல்ல சுடு தண்ணி குளத்துக்குப் போயிடுவோம். என்னால் குளிர் தாங்க முடியில. “

பனி படர்ந்திருக்கும் அந்த மரக்கிளையிலிருந்து தாவி, கீழே பனி மறைத்திருந்த பாறையின் மீது குதித்தன அந்தக் குரங்குகள். பொழிந்துகொண்டிருந்த பனி, பஞ்சுகளாய் அதன் ரோமங்களில் பதிந்தன. விறைப்பை ஏற்படுத்திடும் அந்த வெள்ளைப் பனியில் கால் வைத்தபடி நடந்து சென்றன அந்தக் குரங்குகள்.

சற்று தூரத்தில் ஒரே புகை மூட்டமாக இருந்தது. அந்தப் புகையை நோக்கித்தான் இந்தக் குரங்குகள் போய்க் கொண்டிருந்தன. அங்கிருந்த அந்த சின்னக் குளத்தினுள் குதித்தன அந்தக் குரங்குகள். இரண்டும் கொடுத்த வாக்குகளை ஒன்றுக்கொன்று நிறைவேற்றின.


கொஞ்சம் விலகி கழுகுப் பார்வையில் பார்த்தால் அந்தக் குளத்தில் பல குரங்குகள் சுடுநீர் குளியலில் இருப்பது தெரியும்.

இது ஜப்பானின் வடக்கில் இருக்கும் நாகனோ (Nagano) பனி மலைப் பகுதி. இங்கு `ஜப்பானிய மக்காவு’ (Japanese Macaque) எனும் குரங்கினம் அதிகமாக காணப்படும். இவை பனி மலைகளில் வாழும் குரங்குகள்.

இந்தக் குரங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே `ஜிகோகுடானி குரங்குகள் பூங்கா’ (Jigokudani Monkey Park) அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பனிமலைகளில் குரங்குகள் அங்குமிங்கும் குதித்து ஓடுவதைப் பார்க்க அந்தக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினர். அவர்களுக்காக அங்கு “கொரொகன்” (Korokan) எனும் உல்லாச விடுதி கட்டப்பட்டது.

“ஜிகோகுடானி” என்பதற்கு ஜப்பானிய மொழியில் `நரக பள்ளத்தாக்கு’ (Hell’s Valley) என்று பெயர். அதற்கு முக்கியக் காரணம், இந்தப் பகுதியில் அதிகம் காணப்படும் “வெந்நீர் ஊற்றுகள்” (Hot Spring). பொதுவாக அந்த வெந்நீர் ஊற்றுகளில் வரும் தண்ணீர் 140 டிகிரி ஃபாரென்ஹீட் அளவிலிருக்கும்.

1963-ல் கொரொகன் விடுதி, வெந்நீர் ஊற்றுகளிலிருந்து வரும் தண்ணீரைக் கொண்டு ஒரு செயற்கை வெந்நீர் குளத்தை அமைத்தது. அதை மனிதர்கள் அளவுக்கு 104 டிகிரி ஃபாரென்ஹீட் என்ற வெப்ப நிலையில் அந்தக் குளத்தில் தண்ணீரை நிரப்பியது. பல சுற்றுலாப் பயணிகளும் அதில் குளித்து குதூகலித்தனர்.

ஒரு நாள், ஒரு பெண் குரங்கு அந்த வெந்நீர் குளத்தில் இறங்கி குளிப்பதைச் சிலர் பார்த்தனர். அடுத்த சில நாள்களில் பல குரங்குகளும் அதில் இறங்கத் தொடங்கிவிட்டன.

பின்னர், `ஜிகோகுடானி குரங்குகள் பூங்கா’ நிர்வாகம் குரங்குகளுக்கு என பிரத்யேக வெந்நீர் குளத்தை அமைத்தது. இதில் பல ஆண்டுகளாக குரங்குகள் குளித்து வருகின்றன.

உலகிலேயே குரங்குகள் வெந்நீர் குளியல் போடுவது இங்கு மட்டும் தான். உலகளவில் இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து குவியத் தொடங்கினர்.


குளிருக்கு இதமாக இருப்பதால் இந்த வெந்நீர் குளத்தில் குரங்குகள் குளிக்கின்றன என்பதே பொதுவான கருத்தாக இருந்து வந்தது. ஆனால், சில நாள்களுக்கு முன்பு ஜப்பானின் `கியோடோ பல்கலைக்கழகத்தை’ (Kyoto University) சேர்ந்த டகேஷிட்டா என்பவர் தலைமையில் ஒரு குழு ஆராய்ச்சியை மேற்கொண்டது. அந்தக் குரங்குகளின் மலத்தை எடுத்து சில ஆய்வுகளை மேற்கொண்டது அந்தக் குழு.

இயல்பாக இந்தக் குரங்குகள் வெந்நீரில் இறங்கும் வழக்கம் கொண்டவை கிடையாது. ஆனால், 1963-ல் இறங்கிய முதல் குரங்கைத் தொடர்ந்து, இன்று இந்தப் பகுதியிலிருக்கும் அத்தனை குரங்குகளும் இதில் இறங்குகின்றன.

இந்த ஆராய்ச்சியில், குளிருக்காக மட்டுமே குரங்குகள் வெந்நீரில் இறங்குவதில்லை. அதற்குப் பின்னணியில் இன்னுமொரு முக்கியக் காரணமும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1_18484 இந்தக் குரங்குகள் வெந்நீரில் குளிப்பது குளிருக்காக மட்டுமல்ல..! 1 18484

இந்தக் குரங்குகளில் “க்ளூகோகார்டிகாய்ட்ஸ்” (Glucocorticoids) எனும் ஹார்மோன் மனஅழுத்தத்துக்கு முக்கியக் காரணியாக இருக்கிறது. இந்த வெந்நீரில் இறங்கும்போது, அந்தக் குரங்குகளில் க்ளூகோகார்டிகாய்ட்ஸ் அளவு குறைகிறது.

அதன் மூலம், இவை மன அழுத்தத்திலிருந்து விடுபடுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெந்நீரில் இறங்கும் குரங்குகளில் அதிக எண்ணிக்கையில் பெண் குரங்குகளே இருக்கின்றன. அதுவும், மாதவிடாய் காலங்களில் அதன் மன அழுத்தம் அதிகரிக்கும் சூழலில், இந்த வெந்நீர் குளியல் அவற்றுக்குப் பெரும் ஆறுதலாக இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.-Source: Vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!