கர்நாடக மக்களுக்கு சிம்பு விடுத்த வேண்டுகோள் – ஒரு கோப்பை தண்ணீருடன் குவியும் ஆதரவு!


தமிழக மக்களுக்கு தண்ணீர் தர விரும்புகிறோம் என்பதை கர்நாடக மக்கள சமூக வலைத்தளத்தில் விடியோ மூலம் தெரிவிக்குமாறு நடிகர் சிம்பு விடுத்த வேண்டுகோளுக்கு அம்மாநில மக்களிடையே ஆதரவு குவிந்து வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உச்சகட்டமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் மைதானம் அருகே பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் முற்றுகைப் போராட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட்டனர்.

இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை திரைத்துறையினரால் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட்டுக்கு தடை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மெளன போராட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி, கமல்,
விஜய் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் நடிகர் சிம்பு கலந்துகொள்ளவில்லை. மாறாக, பத்திரிகையாளர்களை மாலையில் சந்தித்து பேட்டி கொடுத்தார்.

அப்போது பேசிய அவர், வரும் 11-ஆம் தேதி மாலை 3 மணியிலிருந்து 6 மணிக்குள் கர்நாடகாவில் இருக்ககூடிய எனது தாய், தந்தை, அண்ணன், தம்பி என நினைக்கூடிய அத்துனை கர்நாடக மக்களும் ஒரு கிளாஸ் டம்பளரில் தண்ணீர் எடுத்து தமிழர் ஒருவரிடம் கொடுத்து, தண்ணீர் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று விடியோவாக பதிவிடுங்கள். இதைச் செய்யவில்லை என்றால் உங்களுக்கு தண்ணீர் தர விருப்பமில்லை என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

இதை #Unite for humanity என்ற ஹெஷ்டாக்குடன் நமக்குள் இருக்கும் ஒற்றுமையை உணர்த்தும் விதமாக பதிவிடுங்கள்.


ஏனென்றால் இந்த விவகாரம் தொடர்பாக இங்கு நடைபெறும் போராட்டம், மறியல் போன்ற அரசியல் விளையாட்டுகள் போதும்.

நமக்குள் ஒற்றுமை வேண்டும் என்பதால்தான் இதைச் சொல்கிறேன். என் சகோதர, சகோதரிகள் போன்றவர்களான கர்நாடககாரர்களிடம் தண்ணீர் கேட்க சண்டை போட வேண்டுமா? என்று உணர்ச்சிமக்க கூறினார்.

இதைத்தொடர்ந்து சிம்புவின் பேச்சு வைரலாக பரவிய நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பலரும் சிம்புவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் அவர் பேசிய இந்த விடியோவை பரவலாக ஷேர் செய்தனர்.

இதையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக சிம்பு கூறியபடி, தமிழர்களுக்கு தண்ணீர் தர தயாராக உள்ளோம், விரும்புகிறோம் என்ற கூறி ஒரு கோப்பை
தண்ணீருடன் கர்நாடக மக்கள் பலர் விடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகிலும், அலுவலகத்திலும் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு கோப்பையில் நீர் கொடுத்து விடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

இவை அனைத்தும் சிம்பு கூறியபடி #Unite for humanity என் ஹெஷ்டாக்குடன் பதிவிட்டு வரும் நிலையில், தற்போது டிரெண்டாகி வருகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!