ராம்குமாரின் பிரேத பரிசோதனை பற்றி மருத்துவர்கள் வெளியிட்ட 30 பக்க அதிர்ச்சி தகவல்..!


மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி, சிறையில் மரணம் அடைந்த ராம்குமார் வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ ராம்குமார் பிரேத பரிசோதனையில் சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், அவர் கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம்’ என்கின்றனர் மருத்துவர்கள்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் இளம்பெண் சுவாதி.

இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை, கொலை நடந்த ஒருவாரத்தில் போலீஸார் கைது செய்தனர்.

பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலேயே ராம்குமார் கைது செய்யப்பட்டார். ‘ சுவாதியை ஒருதலையாகக் காதலித்தேன். அவர் என்னுடைய நிறத்தைக் கூறி கிண்டல் செய்ததால் கொன்றேன்’ என ராம்குமார் வாக்குமூலம் அளித்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

அதேநேரம் ராம்குமாரின் தந்தை பரமசிவம், ‘ என் மகனைப் போலீஸார் தவறாகக் கைது செய்துவிட்டனர். இந்தக் கொலைக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

அதைக்கூறிவிடக் கூடாது என்பதற்காவே கழுத்தை அறுத்தனர். சுவாதி கொலையின் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்’ என கதறினார்.

சிறையில் தன்னை சந்திக்க வந்த வழக்கறிஞர்களிடமும், ‘ இந்தக் கொலையில் நான் சம்பந்தப்படவில்லை’ எனத் தெரிவித்தார். ‘ உண்மைக் குற்றவாளிகளைப் போலீஸார் காப்பாற்றப் பார்க்கின்றனர்’ என்ற தகவல்களும் வெளியாயின.

இந்நிலையில், புழல் சிறையின் இரண்டாம் எண் பிளாக்கில் அடைபட்டிருந்த ராம்குமார், மின்சார வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டார் எனத் தகவல் வெளியானது.

இந்த சம்பவம் நடந்தது 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி. ‘ ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையைக்கூடத் தர மறுக்கின்றனர்’ என அப்போதே குற்றம் சாட்டினார் அவருடைய வழக்கறிஞர் ராமராஜ்.

ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கூடவே, ராம்குமார் மரணம் குறித்து விசாரணை நடத்திய திருவள்ளூர் நீதிபதி தமிழ்ச்செல்வியின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.

இவ்விரு அறிக்கைகளையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தி. இதுகுறித்து விரிவாக நம்மிடம் பட்டியலிட்டார்.

” ராம்குமார் வழக்கை விசாரித்த திருவள்ளூர் நீதிபதி தமிழ்ச்செல்வி, ‘ ராம்குமார் மின்சாரம் தாக்கி இறந்தார் எனத் தோன்றுகிறது’ எனக் குறிப்பிட்டுவிட்டு, பிரேத பரிசோதனை அறிக்கையை அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.

ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள மிக முக்கியமான கேள்விகளுக்கு விளக்கம் இல்லாமல் இருப்பதால் அவற்றை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் இதுதான்.


1. மின்சார வயரை ராம்குமார் பற்களால் கடித்தார் எனில், அந்தப் பற்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பற்களுக்கும் கீழ் உதட்டுக்கும் இடையே இருக்கும் ஈறு எப்படி பாதிப்பில்லாமல் இருக்கும்? ஒருவர் மின்வயரைக் கடிக்கும்போது நாக்கும் சிறு அளவில் மேல்உதடும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ராம்குமாருக்கு அப்படி எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இவற்றை நீதிபதி கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். இதைக் கேட்பதற்கு அவர் தவறிவிட்டார்.

2. ராம்குமார் சிறைவைக்கப்பட்டிருந்த கொட்டடிக்கு அருகில் இருந்த சுவிட்ச் பாக்ஸை, அவர் கைகளால் அடித்து உடைத்தார் என்கிறார்கள். மிக வலுவான அந்த சுவிட்ச் பாக்ஸை கைகளால் உடைக்கும்போது, ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அவருடைய கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

3. மின்வயரைக் கடித்ததும், அவரைக் காப்பாற்ற காவலர் பேச்சிமுத்து லத்தியால் அடித்தார் எனக் குறிப்பிட்டுள்ளனர். அப்படி அடித்திருந்தால் சிறு காயமாவது ஏற்பட்டிருக்கும். அப்படி எந்தக் காயமும் ராம்குமாருக்கு ஏற்படவில்லை. அப்படியே கீழே விழுந்திருந்தாலும் உடலின் பிற பாகங்களில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். அப்படி எதுவும் இல்லை” என்றவர்,

4. ” ஒருவரை மின்சாரம் தாக்கும்போது பாயும் பாதை (entry wound), வெளியேறும் பாதை (exit wound) ஆகியவை இருக்கும். மின்சாரம் பாய்ந்த பாதை என எதுவும் குறிப்பிடப்படவில்லை. உடலில் பாய்ந்த மின்சாரம் எந்தவழியாக வெளியேறியது என்பதைப் பற்றியும் எந்த வார்த்தைகளும் இல்லை. கரண்ட் ஷாக் ஏற்பட்டால், தூக்கிவீசப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். அதுபற்றியும் எந்த விவரங்களும் இல்லை.

5. 12 இடங்களில் மின்சாரக் காயம் ஏற்பட்டிருந்தாகக் குறிப்பிடுகின்றனர். இது எப்படி எளிதில் சாத்தியமாகும்? அந்த வயர் இன்சுலேசனுடன்தான் இருந்ததா? வயர் பற்றிய தெளிவாக, விரிவான விபரங்களும் இல்லை. வயரில் ஓட்டைகள் இருந்ததா? அப்படியெனில் அதன் பராமரிப்பு சரியில்லையா? வயர் பற்றிய முந்தைய பராமரிப்புப் பணி அறிக்கையைப் பற்றியோ குறைபாடுகளைப் பற்றியோ எந்தவிதக் குறிப்புகளும் இல்லை. மின்சாரத்தால் உடலின் 11 இடங்களில் காப்பரின் அளவு என்ன பற்றியும் எந்த விவரங்களும் சொல்லப்படவில்லை.

சிறைக்குள் நடந்த விஷயம் என்பதால், இந்த விவகாரத்தில் பொய் சாட்சி சொல்லப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். மின்சாரத் தாக்குதலால் ராம்குமார் இறந்தார் என்பதை ஒருவேளை ஏற்றுக் கொண்டாலும், நாங்கள் குறிப்பிடும் காரணங்களுக்காக, அது ஏன் கொலையாக இருந்திருக்கமுடியாது?

தற்கொலைதான் செய்தார் என்பதை எந்த அடிப்படையில் அறிவியல்ரீதியாக நீதிபதியால் முடிவெடுக்க முடிந்தது? அது ஏன் தவறாக இருக்கக்கூடாது?

தொங்கிய வயரின் நீளம் என்ன? இன்சுலேசன்( Insulation) குறைபாடுகள் அதில் இருந்ததா? அதன்மூலம் 12 இடங்களில் மின்காயம் ஏற்பட சாத்தியங்கள் உள்ளதா என்பதை நீதியரசர் விரிவாக ஆராய்ந்துதான் முடிவெடுத்தாரா என்பதும் நாங்கள் முன்வைக்கும் முக்கியமான கேள்விகள்.

அதேநேரம், ராம்குமார் மரணம் அடைவதற்கு முன்பாக 3.30 மணியளவில் அவருக்கு உணவு கொடுத்ததாக சிறைக் காவலர்கள் கூறியுள்ளனர். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் வயிற்றில் உணவுப் பொருட்கள் இருந்ததா என்பதைப் பற்றிய எந்தவிதக் குறிப்புகளும் இல்லை.

ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில், அது எங்கள் கைகளுக்குக் கிடைத்தால், கொலைக்கான ஆதாரங்களைக் கண்டறிய முடியும்.

குறிப்பாக, கழுத்தில் உள்ள குறுத்தெலும்பு(Hyoid) உடைந்துள்ளதா என்பது. பிரேத பரிசோதனை அறிக்கையில், ‘குறுத்தெலும்பு உடையவில்லை’ என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை உறுதிசெய்ய வீடியோ பதிவு உதவலாம். நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முறையான பதில்கள் கிடைத்தால்தான், பிரேதப் பரிசோதனை முறையாக செய்யப்பட்டுள்ளது என உலக அளவில் உள்ள தடயவியல்துறை வல்லுனர்கள் ஏற்றுக்கொள்வர். இல்லையெனில், இந்த அறிக்கையை எள்ளி நகையாடவே வாய்ப்பு அதிகம்” என்றார் நிதானமாக.-Source: Vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!