பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!


தாய்லாந்தின் பாங்காக் நகரின் அருகே உள்ள தொழிற்பேட்டைக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்த தொழிலாளர்கள் அனைவரும் அண்டை நாடான மியான்மரில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.

இவர்கள் வந்த பேருந்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் இரு நாட்டு எல்லையை ஒட்டியுள்ள உள்ள டாக் மாகாணத்தில் வந்தபோது திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பேருந்தின் மையப்பகுதியில் தீப்பிடித்ததால் முன்பக்க இருக்கைகளில் இருந்த தொழிலாளர்கள் வாசல் வழியாகவும் ஜன்னல் வழியாக வெளியேறி உயிர்தப்பினர். ஆனால் பின்புற இருக்கைகளில் இருந்தவர்களால் வெளியேற முடியாமல் தீயில் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் 20 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 27 பேர் உயிர்தப்பினர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய்லாந்தில் மோசமான சாலைகளால் வாகன விபத்து அதிகரித்து வருகிறது. மார்ச் 21-ம் தேதி சுற்றுலா பேருந்து மலைப்பாதையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்தனர். மறுநாள் பள்ளி வாகனம் கவிழ்ந்து 39 பேர் காயமடைந்தனர். உலகிலேயே லிபியாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்தில்தான் சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!