தூதர்களை வெளியேற்றிய விவகாரம் – ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்..!


ரஷ்யாவின் உளவுத்துறை முன்னாள் அதிகாரி செர்ஜய் ஸ்கிர்பால் (66) மற்றும் அவரது மகள் யூலியா (33) ஆகியோருக்கு விஷம் ஏற்றியது தொடர்பாக பல நாடுகள் ரஷியாவை கண்டித்து அந்நாட்டு தூதர்களை வெளியேற்றி உள்ளது. அமெரிக்காவும் சியாட்டில் நகரில் செயல்பட்டு வந்த ரஷ்ய தூதரகத்தை மூடியதோடு, அந்நாட்டில் பணியாற்றி வந்த 60 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரங்களில் பணியாற்றிவரும் 60 அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற ரஷ்ய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் செய்ன்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடவும் ரஷ்ய அரசு முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா கண்டித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹெதர் நோவர்ட் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

ரஷ்யாவின் பதில் நடவடிக்கையானது முற்றிலும் நியாயமற்றது. பிரிட்டன் குடிமகன் மற்றும் அவரது மகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையில் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். முக்கிய விஷயங்களில் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டவில்லை என்பதையே ரஷ்யாவின் நடவடிக்கை காட்டுகிறது.

ரஷ்ய உளவாளிகளை வெளியேற்றும் அமெரிக்காவின் முடிவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்து இதுவரை 153 ரஷ்ய உளவாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முற்றிலும் நியாயமான இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வருந்தத்தக்க தேவையற்ற நடவடிக்கைகளை ரஷ்யா தேர்ந்தெடுத்துள்ளது போல் தோன்றுகிறது.

இதுபோன்று பிரிட்டனுக்கு ஆதரவு அளிக்கும் 28 நாடுகளுக்கு எதிராகவும் நியாயமற்ற நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளது. ரசாயன தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா மேலும் தன்னை தனிமைப்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!