மூதாட்டியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற பெண்… அதிர வைத்த காரணம்..!


பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை கல்லாங்குட்டை தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு(வயது 82).

கடந்த 16-ந் தேதி காலையில் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி வைத்து திணிக்கப்பட்டிருந்த நிலையில் சின்னப்பொண்ணு வீட்டில் பிணமாக கிடந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை கொலை செய்து விட்டு அவரது கழுத்து, மூக்கு, காதில் அணிந்திருந்த 3 பவுன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்றிருந்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார் கல்லாங்குட்டை தெருவில் விசாரணை நடத்தினர்.

அப்போது கல்லாங்குட்டை தெருவை சேர்ந்த கணேசன் மனைவி சத்யா(37) என்பவர், கடந்த 16-ந் தேதி முதல் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் சத்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சின்னப்பொண்ணுவை கொலை செய்து விட்டு, ஓசூரில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஓசூருக்கு சென்று, சத்யாவையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.

சத்யா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், கணேசனுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான ஓராண்டுக்கு பிறகு கணேசன் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து நான், செங்கல்சூளைக்கு வேலைக்கு சென்றேன்.


அப்போது அங்கு வேலைக்கு வந்த அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்த செல்வம்(44) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். மேலும் செல்வம், எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது ஒருநாள் செல்வம், பலரிடம் கடன் வாங்கி இருப்பதாகவும், அந்த கடனை அடைத்து விட்டால் இருவரும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் கூறினார்.

உடனே எனக்கு சின்னப்பொண்ணுவின் ஞாபகம் வந்தது. ஏனெனில் அவர் எப்போதும் கழுத்து, காது, மூக்கில் நகை அணிந்திருப்பார். மேலும் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். பலருக்கு வட்டிக்கும் பணம் கொடுத்திருந்தார்.

எனவே அவரிடம் நகை மற்றும் பணம் அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன். அவரை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடிக்கலாம் என்று செல்வத்துடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன்.

அதன்படி கடந்த 15-ந் தேதி இரவு நானும், செல்வமும் சின்னப்பொண்ணுவின் வீட்டிற்கு சென்றோம். அங்கு தூங்கிக்கொண்டிருந்த சின்னப்பொண்ணுவின் கை, கால்களை கயிற்றால் கட்டினோம். அப்போது அவர் சத்தம்போட முயன்றதால் சின்னப்பொண்ணுவின் வாயில் துணியை வைத்து திணித்தோம்.

மேலும் தலையணையால் அவரது மூக்கில் அழுத்தினோம். அதில் அவர் இறந்தார். இதையடுத்து சின்னப்பொண்ணு காது, மூக்கு, கழுத்தில் அணிந்திருந்த நகை, வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு ஓசூருக்கு சென்று விட்டோம்.

இவ்வாறு அவரது வாக்குமூலத்தில் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து 3 பவுன் நகையும், ரூ.40 ஆயிரமும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. தொடர்ந்து 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த புதுப்பேட்டை போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!