ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் சசி குடும்பத்தை தாக்கிய அதிர்ச்சி மரணங்கள்..!


ஜெயலலிதா மரணமடைந்து 15 மாதங்களுக்குள் மகாதேவன், சந்தானலட்சுமி, நடராஜன் என சசியின் சொந்தங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது மன்னார்குடி சொந்தங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போயஸ்கார்டனில் சசிகலா குடியேறியது தொடங்கி அடுத்தடுத்து அவரது அண்ணன் தம்பிகள், அக்காள் மகன்கள், ஆதிக்கம் அதிகரித்தது.

ஆட்சி அதிகாரத்திலும் சசிகலா குடும்பத்திற்கு சலாம் போட்டவர்களே நியமிக்கப்பட்டனர். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பங்கு பிரித்துக்கொண்டு சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ சீட் ஒதுக்கி தனக்கு வேண்டியவர்களை அமைச்சர்களாக்கினர். சுதாகரனை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக்கினார்.

டிடிவி தினகரனை எம்பியாக்கினார் சசிகலா. தனது கைப்பிடியில் ஜெயலலிதாவையும், சொந்தங்களின் கைப்பிடியில் ஆட்சி, கட்சி அதிகாரத்தையும் வைத்திருந்தார் சசிகலா. அனைத்திற்கும் நிழலாக இருந்து செயல்பட்டது நடராஜன் என்றால் மிகையாகாது. எல்லாம் 2011 வரைதான், சசிகலா தவிர அத்தனை பேரையும் ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. பலரையும் சிறையில் தள்ளினார்.

ஜெயலலிதா மர்ம மரணம்

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 75 நாட்கள் வரை சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி இறந்தார். 75 நாட்களும் அப்பல்லோவில் என்ன நடந்தது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.


சசிகலாவின் வேடம்

ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து சசிகலா அதிரடி அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அதிமுக பொதுச்செயலாளரானார். அவரை போலவே மேக்அப் போட்டார், உடையணிந்தார், கையைசைத்தார். இதெல்லாம் அதிமுகவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது எல்லாம் சில நாட்கள்தான்.

சசிகலா குடும்பம்

சொத்துகுவிப்பு மேல்முறையீடு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறைக்குச் சென்றார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் சசிகலா, சசிகலா அண்ணன் மகன் சுதாகரன், சசிகலா அண்ணி இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். அதற்கடுத்து சசிகலா வீட்டிலும் சொந்தங்கள் வீட்டிலும் மரணங்கள் நிகழ்ந்து மன்னார்குடி வகையறாக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

மகாதேவன் மரணம்

கடந்த 2017ம் வருடம் ஏப்ரல் மாதம் 15ம் தேதி அன்று திருவிடைமருதூர் கோயிலுக்கு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பூஜைக்காகச் செல்லும் போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிகிச்சைக்கு மருத்துவமனை கொண்டுசெல்லும் போதே அவர் உயிர் பிரிந்தது. 47 வயதான மகாதேவன் மரணமடைந்தது பெரிய இடியாகத்தான் இறங்கியது.


சசிகலாவின் அண்ணி சந்தானலட்சுமி

சசிகலாவின் மற்றொரு அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி சந்தானலட்சுமி, இவர் டிடிவி தினகரனின் மாமியாராவார். கடந்த பல வருடங்களாகவே இருதய நோயால் பாதிக்கப்பட்டு வந்த சந்தானலட்சுமி, ஜூலை 27ம்தேதி மாரடைப்பால் இறந்தார். அண்ணி சந்தானலட்சுமி மீது மிகுந்த பிரியமும் மரியாதையும் கொண்டிருந்தவர் சசிகலா. ஆனாலும் அவர் பரோலில் வரவில்லை. சிறையிலேயே கண்ணீர் விட்டார்.

நடராஜனுக்கு பாதிப்பு

கடந்த அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நலமடைந்து வீடு திரும்பினார் நடராஜன். ஜெயலலிதாவிற்கும் இதே போல சிகிச்சை அளித்திருந்தால் அவர் உயிரோடு வீடு திரும்பியிருப்பார் என்று அதிமுகவினர் கூறி வந்தனர். அமைச்சர்களும் இதனையே தெரிவித்தனர்.

மன்னார்குடி வகையறா மரணம்

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் நடராஜன். ஆனால் சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலையில் அவர் மரணமடைந்தார். உடல்நலமடைந்து நடமாடத் தொடங்கிய நடராஜன் மரணம் சசிகலாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மரணமடைந்து 15 மாதங்களுக்குள் மன்னார்குடி வகையறாவில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் மக்களுக்கு ஏதோ ஒரு உண்மையை உணர்த்தத் தொடங்கியுள்ளது.-tamil.oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!