தஞ்சையில் முள்ளி வாய்க்கால் முற்றம் அமைக்க நடராஜன் செய்த தானம்! என்ன தெரியுமா..?


தஞ்சையை அடுத்த விளார் கிராமத்தில் ம.நடராஜன் 1943-ல் பிறந்தார். அவர் மாணவ பருவத்திலேயே 1967-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அதன்பின்னர் 1970-ல் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார்.

1973-ல் நடராஜன்- சசிகலா திருமணத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார். நடராஜன், தமிழ்மொழி மீது அளவற்ற பற்றுக்கொண்டவராக இருந்தார். தமிழ், இலக்கியம் குறித்தும் அரசியல் பற்றியும் நடராஜன், கருணாநிதியுடன் ஆலோசிப்பதுண்டு. மேலும் அனைத்து கட்சி தலைவர்களிடமும் நெருங்கி பழகியவர். கருணாநிதி, வீரமணி, வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களிடம் அன்பு பாராட்டி பழகியவர். புதிய பார்வை இதழை ஆசிரியராக இருந்து நடத்தி வந்தவர்.

சந்திரலேகா ஐ.ஏ.எஸ். அதிகாரி மூலம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் நடராஜனின் மனைவி சசிகலா ஜெயலலிதாவின் தோழியாக உயர்ந்தார்.

ஆண்டுதோறும் தை மாதம் தஞ்சையில் பொங்கல் விழா நடத்தி தமிழ் அறிஞர்களை கவுரவப்படுத்தி பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வந்தார். 3 நாட்கள் தமிழர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இலங்கையில் இனப்படுகொலையில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவாக தஞ்சையில் தனது நிலத்தை தானமாக வழங்கி அங்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தை அமைத்தவர். இங்கு இலங்கையில் நடந்த போர் காட்சிகள் மற்றும் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து மரணம் அடைந்த முத்துக்குமரன் உள்ளிட்டோரின் நினைவு படங்கள் மற்றும் அங்குள்ள மணிமண்டபத்தில் தமிழுக்காக தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

நடராஜன் தனது மாணவ பருவம் முதல் தனது கடைசிகாலம் வரை தமிழ் மொழிக்காகவும், தமிழ் அறிஞர்களை கவுரவப்படுத்தியும் வந்தார். கடந்த சில ஆண்டுகளாக தான் உடல்நலக்குறைவு அடிக்கடி ஏற்பட்டதால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!