பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யாயின் வீடு பற்றி வருமான வரித்துறை அதிரடி அறிவிப்பு..!


தமிழ், மலையாள பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரீவித்யா. இவர் மறைந்த பிரபல பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார். சிவாஜி கணேசன் ஜோடியாக ‘இமயம்’ படத்தில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்துள்ள ‘அபூர்வராகங்கள்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். ரஜினிகாந்தின் ‘மாப்பிள்ளை’ படத்தில் வில்லி மாமியாராகவும், விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். ஸ்ரீவித்யாவும் மலையாள பட அதிபர் ஜார்ஜ் தாமசும் காதல் திருமணம் செய்துகொண்டு 1980-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

ஸ்ரீவித்யா 2006 அக்டோபர் மாதம் தனது 53-வது வயதில் புற்றுநோயால் பாதித்து திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். ஸ்ரீவித்யாவுக்கு சென்னை அபிராமபுரத்தில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டை ஸ்ரீவித்யா வரி பாக்கி வைத்து இருந்ததாக கூறி வருமான வரித்துறையினர் கைப்பற்றினார்கள். அந்த வீட்டில் குடியிருப்பவரும் வருமான வரித்துறையிடமே வாடகையை செலுத்தி வந்தார். வீட்டை கைப்பற்றியதை எதிர்த்து கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

தற்போது வருமான வரித்துறைக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவித்யா வீட்டை வருகிற 26-ந் தேதி ஏலம் விடப்போவதாக வருமான வரித்துறை அறிவித்து உள்ளது. குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.1 கோடியே 14 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!