வாழ்நாள் முழுவதும் அதிபர் இனி ஜின் பிங் தான் – சீனா அதிரடி..!


சீனாவில் அதிபர் பதவி வகிப்பவர் ஜின்பிங் (வயது 64). இவர், அந்த நாட்டில் துணைப்பிரதமராகவும், துணை அதிபராகவும் பதவி வகித்த ஸி ஜாங்சனின் மகன் ஆவார்.

ஜின்பிங், கடந்த 2013–ம் ஆண்டு, மார்ச் மாதம் 14–ந் தேதி அதிபர் ஆனார். தொடர்ந்து 2–வது முறையும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் 2023–ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

சீனாவை பொறுத்தவரையில், அந்த நாட்டின் அரசியல் சட்டம், ஒருவர் 2 முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க வகை செய்து இருந்தது. 1990–களில் இருந்து இதுதான் நடைமுறையில் இருந்து வந்தது.

ஆனால் அண்மைக்காலங்களில் ஜின்பிங் தன்னை வலிமை வாய்ந்த தலைவராக வளர்த்துக் கொண்டு விட்டார். கட்சிக்கும், ஆட்சிக்கும், ராணுவத்துக்கும் அவர் தலைவர். அவர் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலையை உருவாக்கி விட்டார்.

இந்த நிலையில்தான் சமீபத்தில் நடந்த சீன கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில், அதிபர் பதவியை ஒருவர் 2 முறை மட்டுமே வகிக்க முடியும் என்ற வரையறையை நீக்குவதற்கு முன்மொழியப்பட்டது. அங்கு கட்சி எடுப்பதுதான் முடிவு என்ற நிலை உள்ளது.

இருப்பினும், ‘ரப்பர் ஸ்டாம்ப்’ என வர்ணிக்கப்படுகிற சீன நாடாளுமன்றத்தில், அரசியல் சாசன சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. முதலில் இதற்கான அனுமதியை 7 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு வழங்கியது.


அதைத் தொடர்ந்து சீன நாடாளுமன்றத்தின் வருடாந்திர அமர்வில் நேற்று இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கான ஓட்டெடுப்பு அங்கு நடந்தது. கையை உயர்த்தும் முறையோ, மின்னணு ஓட்டு முறையோ இன்றி, காகித ஓட்டுச்சீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டது.

அதில் அரசியல் சாசன திருத்தத்துக்கு சம்மதம், சம்மதம் இல்லை, ஓட்டெடுப்பை புறக்கணிக்கிறேன் என்று 3 தெரிவுகள் இருந்தன. அதிபர் ஜின்பிங், முதலில் தனது ஓட்டை சிவப்பு நிற ஓட்டுப்பெட்டியில் செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் அனைவரும் வாக்கு அளித்தனர்.

ஓட்டெடுப்பு முடிந்ததும், ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் அரசியல் சாசன திருத்தத்துக்கு ஆதரவாக 2 ஆயிரத்து 958 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 2 ஓட்டுகள் விழுந்தன. 3 பிரதிநிதிகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர். மெஜாரிட்டியான பிரதிநிதிகள் அரசியல் சாசன திருத்தத்துக்கு ஆதரவாக வாக்கு அளித்ததால், திருத்தம் நிறைவேறியது.

இதன்மூலம் சீன அதிபராக ஜின்பிங் தனது வாழ்நாள் முழுவதும் பதவியில் தொடர வழி பிறந்து உள்ளது. அந்த வகையில், சீனாவின் நிறுவனர் என அழைக்கப்படுகிற மாசேதுங்குக்கு பிறகு வாழ்நாள் முழுக்க பதவியில் இருக்கப்போகிறவர் ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன அதிபரின் பதவிக்கால வரைமுறையை நாடாளுமன்றம் நீக்கி இருப்பது விமர்சனங்களுக்கும் வழி வகுத்து உள்ளது. இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், ‘‘இந்த அரசியல் சாசன திருத்தமானது, சீனாவில் ஒரு கட்சி ஆட்சி என்பதை ஒரு தலைவர் ஆட்சி என்ற அளவுக்கு மாற்றி விடும். சீன அதிபர் பேரரசர் போல இருப்பார்’’ என கூறுகின்றனர்.

சீன அதிபர் ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அதிபர் பதவி வகிக்கலாம் என்பது அண்டை நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!