மெரினாவில் தற்கொலை செய்த காவலரின் தந்தை கதறல் – தோட்டாவை தேடும் போலிஸார்..?


மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் அமைந்துள்ளது.

ஜெயலலிதா சமாதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதப் படை போலீஸ்காரர்கள் 12 பேர் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 4 ஷிப்டுகளாக இவர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

நேற்று நள்ளிரவு 2 மணி ஷிப்டில் ஆயுதப்படை போலீஸ்காரர் அருள்ராஜ் உள்ளிட்ட 4 பேர் பணியில் இருந்தனர். இவர்களில் அருள்ராஜ் உள்ளே செல்லும் பாதையையொட்டி உள்ள இடத்தில் சமாதியின் உள்புறம் பணியில் இருந்தார். இன்று அதிகாலை 4.50 மணிக்கு திடீரென ஜெயலலிதா சமாதி அருகில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

உடனே அங்கிருந்த போலீஸ்காரர்கள் திடுக்கிட்டு சென்று பார்த்தனர். அப்போது போலீஸ்காரர் அருள்ராஜ் தாடையில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற போலீஸ்காரர்கள் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அருண் ராஜை அருகில் திருவல்லிக்கேணியில் உள்ள கோசா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அருண்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். துப்பாக்கியால் சுட்டதும் அருண்ராஜின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்துள்ளது.

அருண்ராஜின் சொந்த ஊர் மதுரை பெருங்குடி. அங்கு பெற்றோர் வசித்து வருகிறார்கள். கடந்த 2013-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு தேர்வானார். சென்னையில் ஆயுதப்படைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். 10 நாட்களுக்கு முன்புதான் மதுரை சென்று விட்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில் அவர் துப்பாக்கியால் சுட்டு இறந்த சம்பவம் கேள்விப்பட்டு பெற்றோர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.


தகவல் கிடைத்ததும் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், இணை கமி‌ஷனர் அன்பு, துணை கமி‌ஷனர் பர்வேஷ் குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

அண்ணா சதுக்கம் இன்ஸ்பெக்டர் சபாபதி அருள்ராஜ் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

தற்கொலை செய்த போலீஸ் காரருக்கு 26 வயது தான் ஆகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் இந்த முடிவை மேற்கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

சென்னையில் ஆயுதப் படை பிரிவில் 2000-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் முக்கிய பிரமுகர்கள் வருகையின்போதும், பல்வேறு அவசர கால பணிக்கும் ஈடுபடுத்தப்படுவார்கள். அதில் சில சமயம் பணிச்சுமையும் ஏற்படும்.

மேலும் ஆயுதப்படை போலீசார் சிறிய தவறு செய் தாலும் ‘மெமோ’ வழங்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதில் ஏதும் அருண்ராஜ் பாதிக்கப்பட்டாரா? என்றும் விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த போலீஸ்காரர் களிடமும், உடன் பணிபுரிந்த போலீஸ்காரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அருண்ராஜ் தற்கொலை தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருண்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் சொந்த ஊரான மதுரைக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்படுகிறது. அவரது உடலை பெற்றுக் கொள்வதற்காக பெற்றோர் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து கொண்டு இருக்கிறார்கள்.

அருள்ராஜின் தந்தை மலைராஜன் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவராக உள்ளார். இவருக்கு 2 மனைவிகள்.
முதல் மனைவி இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மனைவியின் பெயர் பொன்னழகு. இவர்களுக்கு அருள்ராஜ் உள்ளிட்ட 3 மகன்கள்.

மகனை இழந்த சோகத்தில் மலைராஜன் கூறியதா வது:-

எனது மகன் அருள்ராஜ் நேற்று இரவு 7.30 மணி அளவில் போனில் என்னுடன் பேசினான். அவனிடம் நலம் விசாரித்தேன். வங்கி கணக்கில் இன்று பணம் போட்டுவிடுவதாக கூறினான்.

மேலும் இங்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக தெரிவித்தான். அப்போது நான் 2 மாதம் பொறுத்திருக்குமாறும் அதன் பிறகு மதுரைக்கு மாற்றலாகி வருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தேன். இந்த நிலையில் இன்று அவன் தற்கொலை செய்து கொண்டான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

இவ்வாறு கூறிய அவர் கதறி அழுதார்.

தற்கொலை செய்து கொண்ட அருள்ராஜ் பி.காம். படித்துக் கொண்டிருக்கும்போதே விளையாட்டு வீரர் கோட்டாவில் போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார்.-Source: .maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!