பள்ளி சென்ற மாணவன் மாலையில் உயிரற்ற உடலாக கொண்டுவரப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்…!


அய்யப்பன்தாங்கலில் தனியார் பள்ளியில் திறந்து இருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து எல்.கே.ஜி. மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், பெரியகொளுத்துவான்சேரி, மதுரம் நகரைச்சேர்ந்தவர் மோகன்(வயது 35). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா.

இவர்களது மகன்கள் கிருதீஸ்வரன்(3½), ஹரிஹரன்(2). இவர்களில் கிருதீஸ்வரன், அய்யப்பன்தாங்கல் ஆர்.ஆர்.நகர் மெயின்ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாசி மெட்ரிக்குலேசன் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

நேற்று காலை வழக்கம்போல் கிருதீஸ்வரன் பள்ளிக்கு சென்றான். பள்ளி வளாகத்தில் கழிவறைக்குள் உள்ள கழிவுநீர் தொட்டியில்(செப்டிக் டேங்க்) அடைப்பு ஏற்பட்டு இருந்தது.

அதை சரிசெய்யும் பணியில் பாலாஜி, தரணிபாபு(27) ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் கழிவுநீர் தொட்டி மூடியை திறந்து வைத்து விட்டு, மூடாமல் வெளியே சென்று விட்டனர்.

இதற்கிடையில் மதியம் கிருதீஸ்வரன் உள்ளிட்ட எல்.கே.ஜி. மாணவர்கள் சிலர், சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றனர்.

அப்போது மாணவன் கிருதீஸ்வரன், எதிர்பாராதவிதமாக அங்கு திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் ஓடிவந்தனர்.

பின்னர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய ஊழியர்கள், மயங்கிய நிலையில் கிடந்த மாணவனை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவன் கிருதீஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இது குறித்து தகவல் அறிந்துவந்த போரூர் போலீசார், பலியான மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக கழிவுநீர் தொட்டியில் உள்ள அடைப்பை சரி செய்ய வந்த தரணிபாபுவை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பள்ளி நிர்வாகிகளான சாந்தி, புனிதவதி, சுமதி மற்றும் கழிவுநீர் தொட்டியில் உள்ள அடைப்பை சரி செய்ய வந்த மற்றொரு ஊழியர் பாலாஜி ஆகிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:-

இந்த பள்ளியில் கழிவுறைக்கு அருகிலேயே கழிவுநீர் தொட்டி உள்ளது. பள்ளி நேரத்தில் கழிவுநீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்ய முயன்றது தவறு.

அதைவிட அதனை திறந்து வைத்துவிட்டு ஊழியர்கள் அலட்சியமாக சென்றது மிகப்பெரிய தவறு. பணிகள் நடக்கும்போது மாணவர்களை எச்சரிக்கை செய்யாமல் இருந்துள்ளனர்.

பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. பயிலும் சிறுவர்-சிறுமிகள் கழிவறைக்கு செல்ல வேண்டுமானால் பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர்கள்தான் அழைத்துச்செல்ல வேண்டும்.

ஆனால் சிறுவர்களை யார் துணையும் இன்றி தனியாக கழிவறைக்கு அனுப்பி உள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகம், ஒருநாள் கட்டணம் கட்டத்தவறினால் கூட அபராதம் விதிக்கின்றனர்.

கட்டணத்தை உடனே கட்டவேண்டும் என்று போன் மூலம் தகவல் தெரிவிப்பார்கள். ஆனால் இறந்துபோன மாணவனின் மரணம் குறித்து அவனது பெற்றோர்களுக்கு சரியான தகவல் தெரிவிக்கவில்லை.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே மாணவன் உயிரிழந்து உள்ளான். எனவே பள்ளி மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

கழிவுநீர் தொட்டியில் விழுந்து மாணவன் பலியான தகவல் அறிந்ததும் சக மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு சென்று தங்களின் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!