அமெரிக்காவில் நிரவ் மோடி உள்ளாரா? – உறுதி செய்ய டிரம்ப் நிர்வாகம் மறுப்பு..!


பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி, அமெரிக்காவில் உள்ளாரா என்பதை உறுதி செய்ய முடியாது என டிரம்ப் நிர்வாகம் மறுத்துவிட்டது. #NiravModi #PNBScam

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினரும் கீதாஞ்சலி நகை நிறுவன அதிபருமான மெகுல் சோக்சியும் மும்பை பிராடி ஹவுஸ் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் உத்தரவாத கடிதம் பெற்று, பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்து உள்ளதாக புகார் எழுந்து இருக்கிறது.

இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றன.

இந்த நடவடிக்கைக்கு முன்பாக, கடந்த ஜனவரி மாதமே நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பி ஓடிவிட்டனர்.

நிரவ் மோடியை விசாரணைக்கு ஆஜராகுமாறு இ-மெயில் மூலம் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் வெளிநாட்டில் வியாபாரத்தை கவனிக்க வேண்டி உள்ளது, விசாரணைக்கு வரமுடியாது என கூறிவிட்டார்.

இதற்கு இடையே நிரவ் மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரை இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தொடர்புகொண்டு விசாரித்தது. அப்போது அவர், “நிரவ் மோடி அமெரிக்காவில் உள்ளதாக வெளியாகி உள்ள ஊடக செய்திகளை நாங்களும் அறிந்து இருக்கிறோம். ஆனால் அவற்றை உறுதி செய்ய முடியாது” என்று கூறினார்.

நிரவ் மோடி எங்கு உள்ளார் என்பதை கண்டறிய இந்திய அரசுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு அவர், “நிரவ் மோடி வழக்கு விசாரணையில் இந்திய அதிகாரிகளுக்கு உதவி செய்யப்படுமா என்பது தொடர்பான கேள்விகளை நீங்கள் நீதித்துறையிடம்தான் எழுப்ப வேண்டும்” என பதில் அளித்தார்.

அதைத்தொடர்ந்து அமெரிக்க நீதித்துறையிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்க நீதித்துறை மறுத்துவிட்டது.

நிரவ் மோடி அமெரிக்காவில் உள்ளாரா என்பதை உறுதிசெய்ய முடியாது என டிரம்ப் நிர்வாகம் மறுத்துவிட்டது, சி.பி.ஐ.க்கும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து உள்ளது.

நிரவ் மோடிக்கு பயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திலும், அதன் சகோதர நிறுவனங்களிலும், நிரவ் மோடி பெருமளவு முதலீடு செய்து உள்ளார். ஆனால் பயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுத்து உள்ளது.

நிரவ் மோடியின் கடன்களுக்காக பயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த நிறுவனத்தின் சார்பில் நியூயார்க் தெற்கு திவால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற கோர்ட்டு, நிரவ் மோடியின் கடன்களுக்காக பயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனத்திடம் இருந்து வசூல் செய்வதற்கு இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவு பிறப்பித்தது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!