உலகின் மிகப்பெரிய ராட்சத ராட்டினத்தை உருவாக்கும் துபாய்… இதில் என்ன சிறப்பு தெரியுமா..?


உலகில் உள்ள அனைத்துதரப்பு மக்களும் பயணம் செய்ய விரும்பும் முக்கிய பொழுதுபோக்கு சாதனம் ராட்டினம். திருவிழாக்கள், கண்காட்சிகள் என்று அல்லாமல் சில இடங்களில் ராட்டினங்கள் நிரந்தமாக அமைக்கப்பட்டு தினந்தோறும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றன.

துபாய் ஜுமைராவில் அய்ன் துபாய் (பழைய துபாய் 1 பகுதி) எனப்படும் பகுதியில் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உத்தரவின்படி 1.6 கிலோ மீட்டர் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ‘புளூ வாட்டர் தீவு’ என்ற பெயரில் செயற்கை தீவு அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு பல்வேறு அலுவலகங்கள், குடியிருப்புகள் என பல்வேறு உள்கட்டமைப்புகளுடன் புதிய நகரம் உருவாகி வருகிறது. இந்த பகுதியில்தான் உலகின் மிகப்பெரிய ‘துபாய் அய்ன்’ என்ற ராட்சத ராட்டினம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த ராட்சத ராட்டினம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக உள்ளது.

முதலில் இதற்கு ‘துபாய் ஐ’ என்ற பெயர் வைக்கப்பட்டு பிறகு ‘துபாய் அய்ன்’ என்று மாற்றப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டில் இதன் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த ராட்சத ராட்டினம் மொத்தம் 9 ஆயிரம் டன் எடை கொண்டதாக உள்ளது. இது 8 ‘ஏர்பஸ்’ விமானங்களின் எடைக்கு சமமாகும்.


மேலும் ராட்டினத்தின் பிரமாண்ட சக்கரத்தின் அச்சு 130 அடி நீளமும் 65 அடி அகலமும் கொண்டது. இதன் எடை 1,800 டன்கள் ஆகும். இந்த மைய அச்சு அமைப்பு மட்டும் நான்கு ‘ஏர்பஸ் 380’ ரக விமானத்தின் அளவிற்கு சமமானது. இந்த அச்சில் இருந்து வெளிப்புற சக்கரத்தை இணைக்க 192 குழாய்கள் போன்ற தடித்த கம்பிகள் பயன்படுத்தப்பட்டு பிரமாண்ட சைக்கிள் சக்கரம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட சக்கரத்தின் மைய அச்சில் இருந்து 413 அடி நீளமுள்ள பெரிய கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை முழுவதுமாக பொருத்த நான்கு வாரங்கள் தேவைப்பட்டது. இதன் மையப்பகுதி மற்றும் ராட்டின சக்கரத்தை தூரத்தில் இருந்து பார்க்கும்போது ‘கண்’ போன்ற தோற்றத்தில் இருக்குமாறு உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த ராட்சத ராட்டினமானது தரையில் இருந்து 689 அடி உயரமுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ‘நியூயார்க் வீல்’ என்ற ராட்சத ராட்டினமே உலகின் மிகப்பெரிய ராட்டினமாக சாதனை புத்தகங்களில் பதிவாகி உள்ளது.


இதன் உயரம் 623 அடி உயரமாகும். அதேபோல அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘லண்டன் ஐ’ என்ற ராட்சத ராட்டினம் 443 அடி உயரம் கொண்டதாக உள்ளது. தற்போது துபாயில் உருவாக்கப்பட்டு வரும் இந்த ராட்சத ராட்டினம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டால் பல்வேறு சாதனை புத்தகங்களில் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த பிரமாண்ட சக்கரத்தில் கேப்சூல்கள் எனப்படும் மக்கள் அமரும் சிறிய கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சக்கரத்தில் ஒரே நேரத்தில் 1,400 பேர் அமர்ந்து சுற்றலாம். இதில் பயணிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பிரமாண்ட ராட்சத ராட்டினத்தில் ஒருமுனையில் இருந்து மறுமுனைக்கு செல்ல அதாவது ஒரு முறை சுற்றிவர 48 நிமிடங்கள் தேவைப்படும். இந்த ராட்டினத்தில் அமர்ந்துகொண்டு 360 டிகிரி கோணத்தில் துபாயின் அழகை கண்டு ரசிக்கலாம். வானத்தில் மிதப்பதுபோன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் விதத்தில், கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இந்த ராட்டினம் கட்டமைக்கப்பட்டுள்ளது.


தற்போது இந்த ராட்டினத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த (2018) ஆண்டுக்குள் பொதுமக்களுக்காக இந்த ராட்டினம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராட்டினம் அமைப்பதன் மூலம் துபாய்க்கு மேலும் ஒரு புதிய அடையாளம் கிடைத்துள்ளது எனலாம்.

உலகில் அமெரிக்காவுக்கு இணையாக அனைத்து பிரமாண்ட உள்கட்டமைப்புகளை கட்டி வரும் துபாயில் இந்த ராட்சத ராட்டினம் சுற்றுலாத்துறையில் முக்கிய இடம்பிடிக்க உள்ளது.-
Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!