ஆட்டோ சாரதியின் மகள் செய்த சாதனை… பூரிப்பில் பெற்றோர்… அப்படி என்ன சாதனை?


உத்தரகாண்ட் மாநிலத்தில் நீதித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான, மாநில நீதித்துறை சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் டேராடூனை சேர்ந்த பூனம் தோடி என்ற பெண் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை அசோக்குமார், ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுகிறார்.

தினமும் இவருக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை வருமானம் கிடைக்கும். அதை வைத்து குடும்பம் நடத்தியதுடன் மகளையும் படிக்க வைத்தார்.


அவர் தற்போது நீதித்துறை பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். இதைக் கேட்டு பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது பற்றி மாணவி பூனம் தோடி கூறுகையில், “நான் எம்.காம். முடித்த பின்பு நீதித்துறை சிவில் சர்வீஸ் தேர்வுக்காக 4 ஆண்டுகளாக படித்து வருகிறேன்.

இதற்கு முன் 2 முறை தேர்வு எழுதியும் எனக்கு நேர்முக தேர்வு வாய்ப்பு கிடைக்கவில்லை. 3-வது முறை தேர்வு எழுதிய போது முதலிடம் பிடித்தேன்.


எனது பெற்றோர் என்னை வேலைக்கு அனுப்பாமல் படிக்க வைத்ததால் இந்த அளவுக்கு வெற்றி பெற முடிந்தது” என்றார். அவர் மேலும் கூறுகையில், “எனக்கு நீதிபதி ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.

அந்த கனவு நிறைவேறப் போவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். தந்தை அசோக்குமார் கூறுகையில், “ நான் முதலில் சொந்த ஊரில் சிறிய பெட்டிக்கடை வைத்து இருந்தேன்.

அது சரியாக நடைபெறாததால் டேராடூன் வந்து கடை வைத்தேன். அதுவும் சரிவர நடைபெறவில்லை. கடைசியில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டும் தொழிலுக்கு வந்தேன். எனக்கு 3 பிள்ளைகள்.

மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மற்றொரு மகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். இளைய மகள் படித்து நீதித்துறை தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறாள்” என்றார். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!