அன்று கடலில் கட்டியது, இன்று தரையில் எப்படி..? அதிர்ந்த ஆராய்ச்சியாளர்கள்…?


உத்திரகோசமங்கை. ராமநாதபுரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள இக் கோயில் கலை நயம் மிக்க சுற்றுலாத் தலம் என்பது கூடுதல் சிறப்பு. பொதுவாகவே ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே கடலும், கடல் சார்ந்த கோயில்களும் தான் நம் நினைவிற்கு வரும். இராமாயணம் போன்ற இதிகாசத்தில் நடைபெறும் இறை நிகழ்ச்சிகள் பலவற்றின் சுவடுகள் இங்கிருப்பதாக ஐதீகம்!

அதனால் தான் காசி யாத்திரை செல்பவர்கள், தங்களது புனித யாத்திரையை ராமேஸ்வரத்தில் முடிக்கிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் சுற்றியுள்ள ஆன்மீகத் தலங்களையும் தரிசிக்கத் தவறுவதில்லை.அவ்விதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு கோயிலும் ஒரு தனிச் சிறப்பைக் கொண்டதாகவேயிருக்கிறது.

அவ்விதத்தில் ஒரு தனித்துவம் வாய்ந்த கோயிலாகத் தகழ்கிறது, உத்திரகோசமங்கை. ராமநாதபுரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள இக் கோயில் கலை நயம் மிக்க சுற்றுலாத் தலம் என்பது கூடுதல் சிறப்பு. உத்திரகோசமங்கை சிறிய ஊர் தான். சுற்றுப் பகுதியில் கட்டிடங்களே தட்டுப் படாத நிலப் பகுதிக்கு நடுவே ஒரு நட்சத்திரமாய் அதற்குரிய அந்தஸ்துடன் அங்குள்ள கோயிலின் கோபுரம் தோன்றுகிறது.

அந்த ஊரை நெருங்க நெருங்க அந்தக் கோயில் கோபுரத்தின் பிரம்மாண்டமும் கலை அம்சமான அழகும் நம் மனதைக் கொள்ளை கொண்டு, அந்த மங்களேஸ்வர சுவாமி கோயிலை அடையும் வரை நம் கண்கள் அந்தக் கோபுர தரிசனத்திற்கு அடிமையாகத் தான் செய்கிறது.

கோயில் முன்பாக பெரிய மைதானம் போல் காணப்படும் பரந்து விரிந்த இடம் கூட அந்தக் கோயிலின் அமைதிக்கு சுகந்தம் சேர்க்கிறது. கிழக்கு நோக்கிய இரண்டு கோபுரங்கள் உள்ளன. ஒன்று மிக உயர்ந்ததாகவும், மற்றொரு கோபுரம் சாதாரண உயரத்திலும் உள்ளது. இந்த அழகிய கோயிலுக்கு கிடைத்த அற்புத ஹைக்கூ என்றே இந்தக் கோபுரங்களைச் சொல்லலாம்.

பெரிய கோபுரத்தின் வழியே தான் கோயிலுக்குள் செல்லும் பாதை உள்ளது. சிமெண்டு தளம் போடப்பட்ட பாதையில் சற்று தூரம் நடந்தால் கோயிலின் மண்டப வாயில் வருகிறது. நடந்து செல்லும் போதே அருகில் உள்ள நந்தவனம், பச்சைப் பசேல் நிறத்தில் கார்பெட் போல் உள்ள புல் தரையும், இந்தக் கோயிலுக்குள் நுழையும் யாவரையும் சாந்தப் படுத்தி அமைதிக்கு உட்படுத்தும்.

கோயில் கோபுரங்களில் அடிக்கடி சலசலத்து உல்லாசமாக இரண்டு கோபுரங்களையும் மாறி மாறி வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் பறவைக் கூட்டங்கள், எப்படிப்பட்ட மன இறுக்கமான மனிதர்களையும் ஒரு கீற்றுப் புன்னகை செய்ய வைத்து விடும். கோயிலுக்குள் நுழைந்தால், ராமேஸ்வரத்தில் காணப்படுவது போல் நீண்ட பிரகாரங்களும், அதனிடையே தவழ்ந்து வரும் தென்றல் காற்றும் நம்மை ஆசுவாசப் படுத்தும். கோயில் நுழைவாயிலை சற்றே உற்று நோக்கினால் ஒரு ஆச்சர்யம் தோன்றும்.


கடல் நீரால் அரிக்கப் பட்டதைப் போல அந்தத் தூண்களின் சில பகுதிகள் தோன்றுகின்றன. ஆவல் தாங்காமல் அதற்கான விளக்கம் கேட்ட போது, கிடைத்த தகவல் இன்னும் ஆச்சர்யத்தை அதிகப் படுத்தின. முன்னாளில் இப்பகுதி முழுவதும் கடலால் சூழப் பட்டிருந்ததாம். புதன் கடல் கோளில் ஏற்பட்ட மாற்றங்களால் இப்பகுதி மேடாகி விட்டதாகக் கூறுகிறார்கள்.

கோயிலில் உள்ள பல தூண்களைப் பார்க்கும் போது, நாம் கேள்விப் பட்ட விஷயம் உண்மை என்று உணரும் போது, கடல் நீராக இருந்த பகுதி, இப்போது நிலமாக மாறி இருக்கிறது. அந்தப் பகுதியில் தான் இந்தக் கோயில் கட்டப் பட்டிருக்கிறது. நாமும் அதனுள் நின்று கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பே ஜில்லிடச் செய்கிறது.

இந்தப் பகுதியில் பூமியில் தோண்டினால் கடல் மண் தான் உள்ளது என்ற கூடுதல் தகவல் ஒரு நீண்ட காலச் சரித்திரம் உள்ளே புதைந்திருப்தை நாம் உணர முடியும். இந்தக் கோயில் கட்டப் பட்டதற்கான புராணக் கூற்று சுவாரசியமானது. மனிதர்களாகிய நம் குடும்பங்களில் சண்டை சச்சரவு வருவதென்பது சாதாணமான ஒன்று.

இந்தச் சண்டை உலகை ஆளும் ஈசன் குடும்பத்திலும் வந்திருக்கிறது. சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூலோகம் வந்த பார்வதி தேவி சாதாரண மீனவப் பெண்ணாகப் பிறந்தார். இவரை மணப்பதற்காக சிவபெருமான் மீனவர்களுக்குத் துன்பம் தந்து கொண்டிருந்த சுறா மீனை வலை போட்டு பிடித்துக் காட்டிய லீலை நடத்திய இடம் தான் இந்த உத்திரகோசமங்கை.

இந்த இடத்தில் தான் சிவபெருமான் பார்வதிக்கு உபதேசம் செய்துள்ளார். இந்தக் கோயிலை ஆதி சிதம்பரம் என்று அழைக்கிறார்கள். இந்தக் கோயிலின் ஹைலைட்டான விஷயமே கோயிலின் வடக்குப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி உயரமுள்ள மரகத நடராஜர் சிலை தான். உயர் ரக பச்சைக் கல்லால் ஆன இந்த நடராஜர் சிலையை இந்தக் கோயிலுக்கு நன்கொடையாகத் தந்தது ஒரு இஸ்லாமியர்.

கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் இந்த சிலை இந்தக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப் பட்டதிலிருந்து, மத நல்லிணக்கத்திற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அடிகோலிடப் பட்டிருப்பது தெரிகிறது. இந்தச் சிலையைச் சுற்றி வருடம் முழுக்க சந்தனக் காப்பு போடப் பட்டிருக்கும். இந்த நடராஜருக்கு சாத்தப் பட்டிருக்கும் ஆடைகள் கூட இருக்கமாகக் கட்டப் பட்டிருக்கும். இதற்கு காரணம் உள்ளது.

உளி வைத்துச் செதுக்கினால் சிலை உடைந்து விடும் என்று கருதி, இந்த சிலையை இழைத்தே உருவாக்கியிருக்கிறார்கள். இந்த சிலைக்கு எந்த சேதமும் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் வருடம் முழுக்க சந்தனக் காப்பு. மார்கழி மாதம் திருவாதிரை நாளில் மட்டுமே இந்த சந்தனம் கலையப் பட்டு, ஆருத்ர தரிசனம் நடைபெறும்.


அந்த ஒரு நாள் மட்டுமே விதம் விதமான அபிஷேகங்கள் இந்தச் சிலைக்கு நடைபெறும். அன்று இந்தக் கோயிலில் இந்த வைபவத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். விழா நிறைவு பெற்ற அடுத்த நாள் முதல் மீண்டும் சந்தனக் காப்பு போடப் பட்டு விடும். அந்தக் கருவரை கூட எப்போதும் இரும்பு கேட் போட்டுத் தான் பூட்டப் பட்டிருக்கும்.

பக்தர்கள் வரும் போது தீப ஆராதனை கூட, அந்த இரும்புக் கேட்டிற்கு வெளியே இருந்து தான் காட்டப் படும். பக்தர்களும் இரும்பு கேட்டிற்கு இடையே தான் மரகத நடராஜரைத் தரிசிக்க முடியும். உலகிலேயே மரகதக் கலலால் செய்யப் பட்ட உயரமான நடராஜர் சிலை, இந்தக் கோயிலில் மட்டும் தான் உள்ளது. இது மட்டுமல்ல.

இதனை அடுத்து கிழக்கே உள்ள சன்னதியில் உள்ள சிவலிங்கத்தில் 1008 சிவலிங்கங்கள் ஒரே மாதிரியாகச் சிவலிங்கத்தைச் சுற்றி செதுக்கப் பட்டுள்ளன. இதன் தல விருட்சமாக இருக்கும் மரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாம். அந்த மரத்தின் விட்டமும், அதன் பழமையை உறுதி செய்வதாகத் தான் உள்ளது. இந்த சன்னதிக்கு எதிரில் மிகப் பெரிய குளம் உள்ளது.

இந்தக் குளத்தில் உள்ளது கடல் நீராம். இங்கு வசிக்கும் மீன்களும் கடல் மீன்கள் தான் என்று சொல்கிறார்கள். இந்த இடத்தில் கடல் இருந்ததால் இத்தகைய நிலைப்பாடு இருக்கிறது போலும். மூலவராக விளங்கும் சிவபெருமானுக்கும், பார்வதித் தாயாருக்கும் தனித் தனி சன்னதிகள் உள்ளன.

சன்னதிக்கு முன்பாக உள்ள மண்டபங்களில் 18-ஆம் நூற்றாணடடில் வரையப் பட்ட ஓவியங்கள் காணக் காணத் திகட்டாதவை. தென் மேற்குப் பகுதியில் உள்ள தாயாரின் சன்னதிக்கு முன்னால், மேல் விதானங்கள் போடப் படாமல் விடப்பட்ட மண்டபத்தூண்களின் வரிசை ஒரு அழகான புதுக் கவிதைக்குச் சமம். பழமையில் செய்யப் படும் புதுமையை விட, அந்தப் பழமையின் சிதிலங்கள் தான் அழகூட்டும் சரித்திரம் என்பதில் ஐயமல்லை.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்ட இந்தக் கோயிலுக்கு, மாறவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1334 – 1380), நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சொக்கப்ப நாயக்கன் ( கி.பி. 1609 – 1623), தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கர் (கி.பி. 1580 – 1600) போன்றோர் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர். இது தவிர ராமநாதபுரத்தை ஆட்சி செய்த சேதுபதி மன்னர்களும் எண்ணற்ற விரிவாக்கப் பணிகளைச் செய்துள்ளனர்.

கோயிலை முழுக்கச் சுற்றியவுடன் ஒரு நல்ல நடை நடந்த திருப்தி இருக்கிறது, வெளியே வந்து கோயிலுக்கு முன்பாக உள்ள கடையில் ஒரு டீயும், வடையும் வாங்கிச் சாப்பிட்டவாறே மறுபடியும் இரண்டு கோயில் கோபுரங்களுக்கிடையே உற்சாகமாகப் பறக்கும் அந்தப் பறவைக் கூட்டத்தைப் பார்க்கும் போது, நமக்குள்ளும் தொற்றிக் கொள்ளும் அந்த உற்சாகம், நாமும் அந்தப் பறவையாக இருந்திருக்கக் கூடாதா என்ற நம்மை ஏங்க வைக்கும்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!