விழுப்புரம் – மர்ம மனிதர்களால் தாக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்…!


திருக்கோவிலூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மர்ம கும்பல் தாக்கியதில் காயமடைந்த மாணவி ஆபத்தான நிலையில் உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி (வயது 45). இவரது மகள் தனம் (13), மகன் சமயன் (9).

இவர்களில் தனம் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பும், சமயன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த 21-ந் தேதி இரவு வீட்டில் ஆராயி தனது மகள், மகனுடன் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்து ஆராயி உள்பட 3 பேரையும் உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கி விட்டு ஓடி விட்டனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சமயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆராயி, தனம் ஆகியோரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மாணவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் எஸ்.சி., எஸ்.டி. ஆணைய துணைத்தலைவர் முருகன் மற்றும் கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் வெள்ளம் புத்தூர் கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.


குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது.

அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் விசாரணை நடத்தி வந்தார். அவரை மாற்றி விட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் நியமிக்கப்பட்டார்.

அவர் தனிப்படை போலீசாருடன் வெள்ளம்புத்தூர் சென்று கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். வெள்ளம்புத்தூர் கிராமத்துக்கு சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.

ஆராயி மற்றும் அவரது மகள் தனத்தை மர்ம மனிதர்கள் தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற போது அதை தடுக்க முயன்ற மாணவன் சமயன் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிய வந்தது.

இந்த நிலையில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆராயி, அவரது மகள் தனம் ஆகியோருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தனம் 3-வது மாடியில் உள்ள நரம்பியல் சிகிச்சை பிரிவிலும், தாய் ஆராயி பெண்கள் வார்டிலும் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 2 பேருமே கோமா நிலையில் இருந்து வருவதால் அவர்கள் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

மாணவி தனத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இதற்கிடையே தாய்- மகள் 2 பேரும் பலாத்காரம் செய்யப்பட்டனரா? என்பதை கண்டறிய அவர்கள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!