7-ம் வகுப்பு மாணவி உண்ணாவிரதம்… பின்ணனியில் அதிர்ச்சிக் காரணம்…!


கர்நாடக மாநிலம் சிறுகுப்பா தாலுகாவில் உள்ள தலூர் கிராமத்தில் 7-ம் வகுப்பு மாணவி வீட்டில் கழிவறை கட்ட வேண்டும் என்று தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தில் வீடுகளில் கட்டாயம் கழிவறை கட்ட வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக நாட்டில் அனைத்து பகுதிகளிலும் தீவிர விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில இடங்களில் வீட்டில் கழிவறை அமைக்கும் வரை இங்கு வாழ மாட்டேன் என்று பெண்கள் கணவரை உதறிவிட்டு தாய் வீட்டுக்கு சென்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சிறுகுப்பா தாலுகாவில் உள்ள தலூர் கிராமத்தில் 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் கழிவறை கட்ட வேண்டும் என்று தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அந்த மாணவியின் பெயர் மகன் காளி. இவர்களது வீட்டுக்கு கழிவறை கட்டுவதற்கு 2015-ம் ஆண்டிலேயே பஞ்சாயத்து மூலம் திட்ட அனுமதி கிடைத்து இருந்தது.


ஆனால் கழிவறை கட்டப்படவில்லை. இதற்கிடையே மாணவி படித்த பள்ளியில் கழிவறை கட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில் கூறிய கருத்துக்கள் மாணவி மகன்காளி மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்கள் வீட்டுக்கும் கழிவறை வேண்டும் என்று வைராக்கியத்துடன் வீட்டுக்கு திரும்பினார்.

வீட்டில் கழிவறை கட்டும் வரை சாப்பிட மாட்டேன் என்று பெற்றோர்களிடம் கூறிவிட்டு அதன்பிறகு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்த சம்பவம் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு தெரியவந்தது. அதையடுத்து கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜகோபால் ரெட்டி மாணவியின் வீட்டுக்கு சென்று பார்வையிட்டார்.

இது சம்பந்தமாக ராஜகோபால் ரெட்டி கூறும்போது, மாணவி உண்ணாவிரதம் இருக்கும் தகவல் தெரிந்ததுமே நான் பஞ்சாயத்து செயலாளரை அழைத்து இதுபற்றி ஆலோசனை நடத்தினேன்.

உறுப்பினர்களிடமும் கலந்து ஆலோசித்தேன். உடனடியாக கழிவறை கட்டுமான பணியை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!