இந்தியாவில் முதன்முறையாக போர் விமானத்தை ஓட்டி பெண் விமானி சாதனை..!


இந்திய விமானப்படையில் பெண்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு போர் விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பல கட்ட பயிற்சிக்கு பின் அவர்கள் குழுவாக தேர்வு செய்யப்பட்டு தனியாக விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய மூன்று பெண் விமானிகளுக்கு போர் விமானத்தை தனியாக ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்ப்டடு வந்தது. மிக் -21 பைசன் விமானத்தை ஓட்டி இவர்கள் பயிற்சி எடுத்து வந்தனர்.

இவர்களில் அவனி சதுர்வேதி கடந்த திங்கள்கிழமை தனியாக போர் விமானத்தை வெற்றிகரமாக ஓட்டினார். இதன் மூலம் இந்தியாவில் போர் விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்த முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஜாம்நகர் விமானபடை தளத்தில் மேலும் மூன்று பெண்களுக்கு அடுத்தகட்ட போர் விமானப்பயிற்சி விமானப்படை திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில், இந்த சாதனையை படைத்த அவனி சதுர்வேதிக்கு, அமெரிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், அமெரிக்க விமானப்படை முன்னாள் தளபதி மார்தா மெக்சாலி பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் முதல்முறையாக போர் விமானத்தை தனியாக ஓட்டிய பெண் விமானி என்ற பெருமையும் இவருக்கு உண்டு. மார்தா மெக்சாலி 26 ஆண்டுகளாக அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “இந்தியாவின் கண்ணாடி கூரையை உடைத்து, வானைத்தொட்ட விமானப்படை அதிகாரி அவனி சதுர்வேதிக்கு வாழ்த்துக்கள்! போர் விமானத்தை தனியாக ஓட்டிய முதல் இந்திய பெண்”, என கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!