ஆசிட் வீசிய வழக்குக்குச் சென்றவருக்கு பாலியல் பலாத்கார வழக்கு… நடந்த தில்லு முல்லு என்ன?


களியக்காவிளையை அருகே திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை மீது ஆசிட் வீசிய கப்பல் ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

களியக்காவிளையை அடுத்த கேரள எல்லையில் உள்ள காட்டாக்கடையைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற உண்ணி (வயது 30), கப்பல் ஊழியர்.

இவருக்கும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

அதன் பிறகு சுரேஷ், ஆசிரியையை திருமணம் செய்ய விரும்பினார். அதற்கு ஆசிரியை உடன்படவில்லை. இந்த நிலையில் ஆசிரியை, சுரேசை சந்திப்பதை தவிர்த்தார்.

இதுபற்றி சுரேஷ் விசாரித்தபோது, ஆசிரியைக்கு வேறு நபருடன் திருமண ஏற்பாடு நடப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், நேற்று முன்தினம் ஆசிரியை பள்ளிக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தி ஆசிட் வீசினார்.


இதில் ஆசிரியை படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஆசிரியையை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி காட்டாக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆசிரியையிடம் விசாரித்தனர்.

பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ஆசிரியையுடன் சுரேஷ் அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

முதலில் ஆசிட் வீசியதை ஒப்புக்கொள்ள மறுத்த சுரேஷ் பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான சுரேஷ் மீது ஏற்கனவே போக்சோ பிரிவிலும் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மைனர் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது வழக்கு உள்ளது.

அந்த பெண், தற்போது காப்பகத்தில் உள்ளார். அவரிடம் மீண்டும் விசாரித்து சுரேசை அந்த வழக்கிலும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!