ஒரு வயது குழந்தையின் சிகிச்சை செலவுக்காக ரூ.17½ கோடி உதவியை நாடும் பெற்றோர்!

சென்னை சேலையூரில் வசித்து வருபவர் ஆகாஷ் மிஸ்ரா. ஐ.டி. நிறுவன ஊழியரான இவருக்கு ஒரு வயதில் சிவான்ஷி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த குழந்தை ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி’ வகை-2 (முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோய்) என்ற அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த வகை பாதிப்பு இருக்கும் குழந்தைகளால் யாருடைய ஆதரவும் இல்லாமல் உட்காரவோ, நடக்கவோ முடியாது. நரம்பு மண்டல செல்களும் அழிந்துகொண்டே வரும்.

சுவாச தசை பலவீனம் அடைந்து சுவாசிப்பதிலும் பிரச்சினை ஏற்படும். இதுபற்றி தெரியவந்ததும் ஆகாஷ் மிஸ்ரா குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

எப்படியாவது அந்த நோயின் பிடியில் இருந்து தங்களது குட்டி தேவதையை மீட்டு கொண்டுவர வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஸ்பத்திரிக்கு, சிவான்ஷியை சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது, ‘இந்த அரிய நோயை குணப்படுத்த ‘சோல்கென்ஸ்மா’ என்று அழைக்கப்படும் மரபணு சிகிச்சை அவசியம்.

இதற்கான உயிர்காக்கும் மருந்தின் விலை ரூ.17½ கோடியாகும். அமெரிக்காவில் இருந்து வரவழைத்தால் சிகிச்சை அளிக்கலாம்’ என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஐ.டி. நிறுவன ஊழியரான ஆகாஷ் மிஸ்ராவுக்கு ரூ.17½ கோடி என்பது இமாலய தொகையாகும். தனது வீடு, சொத்து என எதை விற்றாலும் அவரால் இந்த தொகையை ஏற்பாடு செய்ய முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து அவர் பலரின் உதவியையும் நாடி வருகிறார். “தமிழக அரசு, தனிநபர், பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் இணைந்து கருணை வடிவிலான உதவிகளை செய்தால் மட்டுமே எங்கள் குழந்தை மறுவாழ்வு பெறுவாள்” என்று ஆகாஷ் மிஸ்ரா உருக்கமாக வேண்டுகோள் விடுத்து உள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!