இரவில் வானத்தில் ஜொலித்த சந்திரயான்-3 – வைரல் புகைப்படம்.!

ஆஸ்திரேலியா நாட்டில் இரவு நேர வானில் தெரிந்த சந்திரயான்-3 புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் இரவு நேரத்தில் வானில் தெரிந்த சந்திரயான்-3 விண்கலத்தின் வசீகரிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை வானியல் ஆர்வலரான டிலான் ஓ’டோனல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்தும், ரீ-ட்வீட் செய்தும் வருகின்றனர்.

இதுகுறித்து வானியல் ஆர்வலர் டிலான் ஓ’டோனல் தனது டுவீட்டில், சந்திரயான்-3 இன் நேரலை வெளியீட்டை யூ-டியூப்பில் பார்த்ததாகவும், அதன்பிறகு சுமார் 30 நிமிடங்களுக்குப் கழித்து, அது தனது வீட்டைக் கடந்து சென்றபோது, இரவு நேரத்தில் அதன் புகைப்படத்தை எடுக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், மின்னும் நட்சத்திரங்களின் பின்னணியில் மயக்கும் நீல நிறத்தில் சந்திரயான்-3 விண்கலம் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

சந்திரயான் 2 திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!