தயாரிப்பாளர் ரவீந்தர் மீது வழக்கு பதிவு!

பிரபல டி.வி. நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டு சமூக வலை தளங்களில் பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்தர்.

முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்னன்னு தெரியுமா?, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள ரவீந்தர் மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- கிளப் ஹவுஸ் என்கிற செயலி மூலமாக அறிமுகமான ரவீந்தர் என்னிடம் நன்றாக பழகினார்.

இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் அவர் என்னிடம் ரூ.20 லட்சம் கடன் கேட்டார். சினிமா நடிகர் ஒருவருக்கு ‘அட்வான்ஸ்’ கொடுக்க வேண்டி இருப்பதாக கூறி இந்த பணத்தை என்னிடம் அவர் கேட்டார்.

நான் ரூ.15 லட்சம் பணம் மட்டும் தன்னிடம் உள்ளதாக கூறி அந்த பணத்தை 2 தவணையாக ரவீந்தரின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தேன்.

இந்த பணத்தை ரவீந்தர் அவர் சொன்னபடி திருப்பி தரவில்லை. இதுபற்றி பல முறை தொடர்பு கொண்டு கேட்டும் அவர் என்னை அலைக்கழித்தார். சில நேரங்களில் அவதூறாக பேசினார். பின்னர் எனது செல்போன் அழைப்பை எடுக்காமல் பிளாக் செய்து விட்டார்.

ரவீந்தர் என்னிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அதுபற்றி உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தயாரிப்பாளர் ரவீந்தர் தரப்பில் இருந்து இந்த பணத்தை உடனடியாக கொடுத்துவிடுவதாக கூறியும் புகாரை வாபஸ் பெருமாறும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை விஜய்க்கு உரிய பணத்தை ரவீந்தர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் மீது மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ரவீந்தர்க்கு நேரடியாக சம்மன் அனுப்பட்ட நிலையில் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரவீந்தர் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!