அடித்து உதைத்த தாய் – 5வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்.. சீனாவில் துயரம்!

சீனாவில் சிறுவன் ஒருவன் தனது தாயிடம் இருந்து தப்பிக்க, 5வது மாடியில் இருந்து குதித்த துயர சம்பவம், சமூக ஊடகங்களில் பரவி பொதுமக்களின் கோபத்தை தூண்டியதுடன், நாட்டில் வலுவான ‘குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள்’ தேவை என விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த மாதம், கிழக்கு சீனாவில் உள்ள அன்ஹுய் மாகாணத்தில் நடந்திருக்கிறது. வீட்டினுள் குச்சியால் தாக்கப்பட்ட ஒரு 6-வயது சிறுவன், குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள வெளிப்புற ஏசி மெஷினில் இருந்து குதித்தான்.

வீடியோவை பதிவு செய்த நபரும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும், ‘சிறுவனை அடிக்க வேண்டாம்’ என்று அந்த தாயிடம் கெஞ்சுவதும், ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே, அச்சிறுவன் திடீரென்று குதிப்பதையும் காண முடிகிறது.

உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், அதிர்ஷ்டவசமாக பிழைத்து விட்டான். ஆனால், அவன் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

சிறுவன் விழுந்து விடப்போகிறான் என்ற கவலையால், அவனை உள்ளே செல்லும்படி வற்புறுத்தவே அவனது தாயார் அவனை தாக்கியதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.

இந்த விளக்கம், மக்களின் கோபத்தை அதிகரித்திருப்பதாக சமூக வலைதளங்களில் வரும் பதிவுகளிலிருந்து தெரிகிறது.

ஒரு சில பயனர்கள், இந்த விளக்கத்தை நம்ப மறுத்துள்ளனர். உண்மையை மூடி மறைக்கும் செயல் என சிலர் பதிவிட்டுள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!