பற்றி எரியும் பிரான்ஸ்… ஒரே நேரத்தில் குவிந்த 45,000 போலீசார்!

பிரான்சில் ஆப்பிரிக்க சிறுவன் சுட்டு கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக அங்கு 45 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே நான்டெர்ரே நகரில் உள்ள போக்குவரத்து சிக்னலில் கடந்த வாரம் சிவப்பு நிற எச்சரிக்கையை மீறி வேகமாக ஒரு கார் சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். அப்போது அந்த காரை நிறுத்துவதற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் காரில் இருந்த 17 வயது ஆப்பிரிக்க சிறுவன் கொல்லப்பட்டான். இது குறித்த வீடியோ அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து சிறுவனுக்கு ஆதரவாக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

நாடு முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

எனவே போராட்டத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் 24 போலீசார் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் பல கட்டிடங்கள், கார்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். நேற்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. கடந்த 5 நாட்களாக ஆயிரத்து 311 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சுவிட்சர்லாந்திலும் போராட்டம்

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் பாரீஸ், நான்டெர்ரே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே சிறுவனுக்கு ஆதரவான போராட்டம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. அதன்படி சுவிட்சர்லாந்து நாட்டின் லொசேன் நகரில் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 7 பேரை அந்த நாட்டின் போலீசார் கைது செய்தனர்.

ஜெர்மன் பயணம் ரத்து

நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அதிபர் மேக்ரான் மேற்கொள்ளவிருந்த ஜெர்மன் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு அடுத்த சில நாட்களுக்கு தான் பிரான்சில் தங்க விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும் வன்முறையை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துகளை சூறையாடி வருகின்றனர். எனவே பெற்றோர் தங்களது பிள்ளைகளை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!