அழுதபடி ஓடி வந்த ரூ.1 கோடி பரிசு பெற்ற வடமாநில தொழிலாளி – மிரண்டு போன போலீசார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த தம்பானூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வடமாநில தொழிலாளர்கள் சிலர் கும்பலாக ஓடிவந்தனர். இதை கண்டு போலீஸ் நிலையத்தில் இருந்தவர்கள் மிரண்டு போனார்கள்.

மேலும் அவர்கள் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்து பாதுகாப்பு நடவடிக்கையிலும் இறங்கினர். இது எதையும் கண்டுகொள்ளாத தொழிலாளர்கள், போலீசார் அருகில் சென்று அவர்களின் கால்களில் விழுந்து கதற தொடங்கினர்.

தாக்க வருகிறார்கள் என்று எண்ணிய நிலையில், தொழிலாளர்கள் போலீசார் காலில் விழுந்து அழுததை பார்த்ததும் போலீசார் பதறி போனார்கள். அவர்கள் வடமாநில தொழிலாளர்கள். அனைவருக்கும் ஆறுதல் கூறி எதற்காக அழுதீர்கள் என கேட்டனர்.

அப்போது அவர்களில் ஒருவர் கையில் லாட்டரி சீட்டுடன் முன்னே வந்தார். அவர் போலீசாரை நோக்கி தனக்கு லாட்டரி குலுக்கலில் ரூ.1 கோடி பரிசு விழுந்திருப்பதாக தெரிவித்தார். பரிசு விழுந்தால் சந்தோஷப்பட வேண்டும்.

அதைவிடுத்து அழுவது ஏன்? என்று போலீசார் கேட்டபோது, பரிசு விழுந்ததை அறிந்ததும், தன் நண்பர்கள் சிலரால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயமாக உள்ளது. எனவே நான் பரிசு பணத்தை வாங்கிவிட்டு ஊர் போய் சேரும்வரை எனக்கு பாதுகாப்பு தரவேண்டும், என்றார்.

இதை கேட்டதும் போலீசார், வடமாநில தொழிலாளிக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என உறுதி கூறினர். மேலும் பரிசு விழுந்த சீட்டை வங்கியில் டெபாசிட் செய்வது உள்பட வழிமுறைகளை தெரிவித்தனர். அதன்பின்பு பரிசு சீட்டுடன் வடமாநில தொழிலாளியும், போலீசாரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!