ஊசியில்லாமல் உடல் எடையை குறைக்க விரைவில் வருகிறது வெகோவி மாத்திரை!

உலகெங்கிலும் வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கும் வருகின்ற ஒரு நோய் உடல் பருமன்.

உடல் பருமன் என்பது தவிர்க்க வேண்டியது என்றும், பல நோய்களை வரவழைக்கக் கூடியது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுவதுடன் இதற்கான பல்வேறு சிகிச்சைகளையும் வழங்குகின்றனர்.

இருப்பினும் உடல் பருமன் அவ்வளவு எளிதில் குறைந்துவிடாது. நீண்ட கால சிகிச்சையோ அல்லது வாழ்வியல் முறைகளோ தேவைப்படும்.

உடல் பருமனை குறைக்கும் சிகிச்சைக்கு பல்வேறு மாத்திரைகள் இருந்தாலும், பெரும்பாலான சிகிச்சைக்கு ஊசி வழி மருந்துகளே பரிந்துரைக்கப்படுகிறது.

எனவே, ஊசி மருந்து போன்ற வீரியம் மிக்க மாத்திரை இருந்தால் எப்படி இருக்கும்..? என்பதே உடல் பருமனால் அவதிப்படும் மக்களின் ஏக்கமாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகியிருக்கிறது.

ஆம். டென்மார்க் நாட்டை சேர்ந்த “நோவோ நோர்டிஸ்க்” எனும் மருந்து உற்பத்தி நிறுவனம், “ஜி.எல்.பி.-1 அகனிஸ்ட்” எனப்படும் ஒரு புதிய மருந்து வகையில், “ஸெமாக்ளூடைட்” எனும் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படும் “வெகோவி” (Wegovy) எனும் மருந்தை, மாத்திரை வடிவில் சந்தையில் கொண்டு வர இருக்கிறது.

ஏற்கெனவே, இது ஊசி வடிவில் கிடைத்தாலும், மாத்திரை வடிவில் கொண்டு வர பல தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் மற்றும் ஆய்வுகளை இந்நிறுவனம் செய்து வந்தது.

இந்த சோதனைகளில், ஊசி மருந்து போலவே இந்த மாத்திரை வேலை செய்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாத்திரைக்கு ஒப்புதல் அளிக்கும்படி இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நீரிழிவு நோயினால் அவதிப்படும் பலருக்கும் உடல் பருமன் குறைப்பில் இந்த மருந்து பலனளிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிப்பதாகவும், கூடுதல் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது அந்நோயினால் அவதிப்படுவோருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

மாத்திரை வடிவில் உள்ளதால், ஊசி வழியாக செலுத்தப்படும் உடல் பருமன் குறைப்பு சிகிச்சை முறைகளை வேண்டா வெறுப்பாக ஏற்போர்களுக்கு, “வெகோவி” ஒரு சிறந்த மாற்றாக பிரபலம் ஆகலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

எனவே இது சந்தையில் பயன்பாட்டுக்கு வரும் நாளை நோயாளிகள் ஆர்வமுடன் எதிர் நோக்குவதாக தெரிகிறது.

“வெகோவி” மாத்திரைகளின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை என “நோவோ நோர்டிஸ்க்” நிறுவனம் தெரிவிக்கிறது.

எலி லில்லி (Eli Lilly), ஃபைசர் (Pfizer) போன்ற மேலும் பல முன்னணி மருந்து நிறுவனங்களும் இது போன்ற “வாய் வழி உட்கொள்ளும் மருந்து” (oral drug) தயாரிக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!