உலகின் மிகப்பெரிய சிறுநீரக கல்லை அகற்றி இலங்கை ராணுவ மருத்துவர்கள் சாதனை!

இலங்கையின் ராணுவ மருத்துவர்கள் குழு, உலகிலேயே அதிக எடைகொண்ட சிறுநீரக கல்லை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உலக சாதனை படைத்திருக்கின்றனர்.

இதுவரை இந்திய மருத்துவர்கள் 2004ம் வருடம் அகற்றியிருந்த கல்தான் மிகப் பெரியதாக கணக்கிடப்பட்டிருந்த நிலையில், அந்த சாதனை இப்பொழுது முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத துவக்கத்தில், கொழும்புவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஒரு நோயாளிடமிருந்து அகற்றப்பட்ட கல், 13.372 சென்டி மீட்டர் நீளமும், 801 கிராம் எடையும் கொண்டதாக இருந்தது என ராணுவம் தெரிவித்துள்ளது.

கின்னஸ் உலக சாதனை பட்டியலில், இதுவரை அகற்றப்பட்ட கற்களிலேயே, இந்தியாவில் 2004ம் வருடம் அகற்றப்பட்ட 13 சென்டி மீட்டர் நீளம் கொண்ட கல்தான் பெரியதாக பட்டியலிடப்பட்டிருந்தது.

அதே போன்று, மிக அதிக எடையுள்ள கல் என 2008ம் வருடம் பாகிஸ்தானில் அகற்றப்பட்ட 620 கிராம் கல் பட்டியலிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய சாதனையை உறுதி செய்த கின்னஸ் உலக சாதனைக்கான நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த கேனிஸ்டஸ் கூங்கே என்பரின் சிறுநீரகத்திலிருந்து 13.372 சென்டிமீட்டர் (5.264 இஞ்ச்) உள்ள ஒரு சிறுநீரக கல், கடந்த 1-ம் தேதி அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

ராணுவ மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைவர் டாக்டர் கே.சுதர்சன் தலைமையில், டாக்டர் பதிரத்னா மற்றும் டாக்டர் தமஷா பிரேமதிலகா ஆகியோர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!