வானத்திலிருந்து வைரம் விழுவதாக நிலத்தில் காத்திருக்கும் விவசாயிகள்!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த பகுதியில் உள்ள வயல் வெளிகளில் மழை பெய்த பின்னர் வைரக்கற்கள் கிடைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் கிடைத்த ரூ.60 லட்சம் மதிப்பிலான வைரத்தை உள்ளூர் வணிகரிடம் நல்ல தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.

அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்னூல் மாவட்ட விவசாயிகள் 2 விலை உயர்ந்த வைரக் கற்களை கண்டுபிடித்து நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.


இந்தநிலையில் விவசாயி ஒருவருக்கு தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரம் கிடைத்தது. அதனை அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியிடம் ரூ.2 கோடிக்கு விற்று ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறி உள்ளார்.

இதையடுத்து அந்த பகுதியில் வானில் இருந்து வைரக்கற்கள் விழுவதாக வதந்தி பரவியது. வைரம் கிடைக்கும் என்ற ஆசையால் விவசாயிகள் நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கர்னூல் மாவட்ட விவசாயிகள் அன்றாட வேலைகளை ஒதுக்கி விட்டு இரவு பகலாக குடும்பத்தினருடன் வயல் வெளிகளில் காத்துகிடக்கின்றனர்.

அங்கு தற்காலிக கூடாரங்கள் அமைத்து வைரக்கற்கள் கிடைக்கும் என காத்திருக்கின்றனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் வைரம் கிடைப்பதாக கூறப்படும் கிராமங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!