குப்பைக்கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளை உண்ணும் காட்டு யானைகள் – இலங்கையில் அதிர்ச்சி!

இலங்கை அம்பாறை மாவட்டத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளை காட்டு யானைகள் உண்ணும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை யானைகள் உணவாக உட்கொள்ளும் அவலம் இலங்கையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக யானைகள் மரணத்தை எதிர்கொள்ளும் பரிதாபகரமான நிலை உருவாகியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து கிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் (130 மைல்) தொலைவில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்லக்காடு என்ற கிராமத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்டு கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 20 யானைகள் உயிரிழந்துள்ளன.

இறந்த விலங்குகளை பரிசோதித்ததில், குப்பை மேட்டில் உள்ள மக்காத பிளாஸ்டிக்கை அதிக அளவில் விழுங்கியிருப்பது தெரியவந்ததாக வனவிலங்கு கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்பகுமார தெரிவித்தார்.

யானைகள் இலங்கையில் பெரிதும் போறப்படுகின்றன, ஆனால் அவை அழியும் அபாயத்தில் உள்ளன. நாட்டின் முதல் யானைகள் கணக்கெடுப்பின்படி, 19 ஆம் நூற்றாண்டில் 14,000 ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கை 2011 இல் 6,000 ஆகக் குறைந்துள்ளது.

பசியுள்ள யானைகள் குப்பைக் கிடங்கில் உள்ள கழிவுகளைத் தேடி, பிளாஸ்டிக் மற்றும் கடினமான பொருட்களை உட்கொள்வதால், அவற்றின் செரிமான அமைப்புகளை சேதப்படுத்தும் என்று புஷ்பகுமார கூறினார்.

நாடு முழுவதும் உள்ள வனவிலங்கு மண்டலங்களில் 54 குப்பைக் கிடங்குகள் உள்ளன, அவற்றின் அருகே சுமார் 300 யானைகள் சுற்றித் திரிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளக்காடு கிராமத்தில் கழிவு மேலாண்மை தளம் 2008 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டது.

அருகிலுள்ள ஒன்பது கிராமங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கு கொட்டப்படுகின்றன, ஆனால் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை.

யானைகள் குப்பைக் குழிக்கு அருகில் வந்து குடியேறியதால், அருகில் உள்ள கிராம மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!