அமேசானில் வேலை வாய்ப்பு பெற்ற பீகார் மாணவர்… எவ்வளவு சம்பளம்..?

பீகாரின் பாட்னா என்.ஐ.டி. மாணவரான அபிசேக், அமேசான் நிறுவனத்தில் ரூ.1.8 கோடி சம்பளத்திற்கு வேலையில் சேர வாய்ப்பு பெற்று உள்ளார்.

பீகாரின் பாட்னா நகரில் ஜஜ்ஜா பகுதியை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் (என்.ஐ.டி.) இறுதியாண்டு கணினி பொறியியல் மாணவராக உள்ளார்.

இவருக்கு அமேசானில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.1.8 கோடி சம்பளத்திற்கு வேலை கிடைத்து உள்ளது. அவரது கடின உழைப்பிற்கு பலனாக இது அமைந்து உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி இதற்கான அறிவிப்பை அபிசேக்கிற்கு அமேசான் தெரிவித்தது.

2021-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி அபிசேக் கோடிங் தேர்வில் ஈடுபட்டு உள்ளார். அதன்பின்னர், கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி 3 சுற்றுகள் கொண்ட ஒரு மணிநேர நேர்காணலிலும் கலந்து கொண்டார். அதில், வெற்றியும் பெற்று உள்ளார்.

அபிசேக்கிடம் ஜெர்மனி மற்றும் அயர்லாந்து நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் நேர்காணலை நடத்தி உள்ளனர். இதில், பிளாக்செயின் பற்றி விவரமுடன் கூறி அவர்களிடம் நன்மதிப்பை பெற்று உள்ளார். இதனால், அவருக்கு இந்த வேலை கிடைக்க வழியேற்பட்டு உள்ளது.

அபிசேக்கிற்கு முன்னர், பாட்னா என்.ஐ.டி.யை சேர்ந்த அதிதி திவாரி என்பவருக்கு, ஆண்டுக்கு ரூ.1.6 கோடி சம்பளத்திற்கு பேஸ்புக்கில் இருந்து வேலை கிடைத்தது.

மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் படித்தவரான மாணவி அதிதியின் தாயார் அரசு பள்ளி ஆசிரியையாக உள்ளார். அவரது தந்தை டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அதிதிக்கு முன்பு, பாட்னா என்.ஐ.டி.யில் படித்த சம்பிரீத்தி யாதவ் என்ற மாணவிக்கு கூகுள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.11 கோடி சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!