ஆஸ்கர் விருது பெற்றும்… உலகம் முழுவதும் பிரபலமானாலும் வறுமையில் வாடும் நிலை!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உதட்டில் பிளவுடன் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன.அப்படி ஒரு குறையுடன் பிறந்தவர் தான் பிங்கி சோன்கர்.

மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்த இவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு ஒரு பொற்காலமாக மாறியது. ஏனென்றால் பிங்கி 6 வயதாக இருக்கும் போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த ஆண்டு வெளியான சிலம் டாக் மில்லியனர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தார். இங்கிலாந்து திரைப்பட இயக்குனர் டானிபாயல் இயக்கிய இந்த படம் மும்பை குடிசை பகுதி சிறுவர்கள் பற்றிய கதை ஆகும்.

மும்பை சிறுவர் காப்பகத்தில் இருந்த 18 வயது இளைஞர் கேம் ஷோ ஒன்றில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்காக சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.

இந்த படம் சிறந்த திரைக்கதை,சிறந்த ஒளிப்பதிவு,சிறந்த இசை உள்ளிட்ட 8 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை பெற்று சாதனை படைத்தது. இந்த படத்தின் சிறந்த இசை அமைப்பாளர் என்ற விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது.

லாஸ் ஏஞ்செல்சில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில் குழந்தை நட்சத்திரம் பிங்கி சோன்கர் தனது தந்தை ராஜேந்திர சோன்கருடன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்.

பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் சிலம் டாக் மில்லியனர் பட குழுவினருடன் தானும் கலந்து கொண்டது பெருமையாக இருக்கிறது என பிங்கி சோன்கர் தெரிவித்தார்.

இதன் மூலம் அவர் நீண்டகாலமாக அனுபவித்து வந்த உதடு பிளவு பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்தது. வாரணாசியை சேர்ந்த சுபோத் குமார் சிங் என்ற டாக்டர் பிங்கி சோன்கருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் அவரது உதடை சரி செய்தார்.

இதனால் மற்ற குழந்தைகளை போல் பிங்கியும் மாறினார். ஒரே படத்தின் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலமான பிங்கியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது கிராமமக்கள் நினைத்து இருந்தனர். ஆனால் அதன் பிறகும் பிங்கியின் வாழ்க்கை தரம் மாறவே இல்லை.

தற்போது அவருக்கு 20 வயதாகிறது. 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சொந்த கிராமத்தில் தான் அவர் தனது குடும்பதினருடன் வசிக்கிறார். இவரது தந்தை இன்னும் காய்கறி மற்றும் பழம் வியாபாரம் தான் செய்து வருகிறார்.

முன்பு எப்படி அவரது குடும்பத்தில் வறுமை நிலவியதோ அப்படி தான் இப்போதும் நீடிக்கிறது.

தினமும் பிங்கி படிப்பதற்காக 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு சென்று வருகிறார். அவரது கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தினமும் நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்.

தனது வறுமை குறித்து பிங்கி கூறியதாவது, எனது தந்தை குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாக உழைத்து வருகிறார். சீசனுக்கு தகுந்தாற்போல காய்கறி மற்றும் பழம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த வருமானத்தை வைத்து தான் நாங்கள் வாழ்கிறோம். எனது வீடு மிகவும் சிறியது.

2 அறைகள் கொண்ட வீட்டில் ஒரு அறையில் கதவே கிடையாது. எங்களுக்கு வேறு யாரும் உதவி செய்வது இல்லை. தினமும் நாங்கள் வறுமையோடு போராடி வருகிறோம்.

எனது ஆசையெல்லாம் வருங்காலத்தில் ஒரு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும். அதன் மூலம் என்னை போல கிராமத்தில் வாழும் பெண்களின் நலனுக்காக உதவி செய்ய வேண்டும் என்பது தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!