தடையை மீறி சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.டெக். பட்டம் பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய போது பெண் கல்விக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மீறியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் 2021-ல் சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.டெக். நுழைவு தேர்வு எழுதி காத்திருந்த அந்த நாட்டின் மாணவி பெஹிஸ்டா தலிபான்கள் பிடியில் சிக்கிக் கொண்டார்.

நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பின்னரும் அவரால் கல்லூரியில் சேர முடியவில்லை. அடிப்படைவாத பிற்போக்கு கொள்கைகளை தாங்கிய தலிபான்கள் அவரை வீட்டிலேயே சிறை வைத்தனர்.

ஆனால் தன்னம்பிக்கை இழக்காத அந்த மாணவி தனது செமஸ்டர்கள் அனைத்தையும் தொலைதூரத்தில் இருந்து ஆன்லைன் வாயிலாக எழுதி முடித்தார்.

தற்போது சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.டெக். படித்து முடித்துள்ள நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களில் பெஹிஸ்டாவும் ஒருவராக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது தொடர்பாக அந்த மாணவி கூறுகையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நேரத்தில் நான் ரசாயன பொறியியல் முதுகலை பட்டப்படிப்பிற்காக சென்னை ஐ.ஐ.டி.யை தேர்வு செய்தேன்.

பின்னர் நேர்காணலில் தேர்ச்சி பெற்றதாக எனக்கு தகவல் வந்தது. ஆனால் தலிபான்கள் பிடியில் இருந்ததால் என்னால் உடனடியாக சென்னைக்கு திரும்ப முடியவில்லை. இதனை மின்னஞ்சல் வாயிலாக கல்லூரிக்கு தெரியப்படுத்தினேன்.

பேராசிரியர் ரகு எனக்கு தேவையான உதவிகளை செய்தார். பின்னர் ஆன்லைன் வாயிலாக எனது படிப்பு தொடர்ந்தது. முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு நான் மிகப்பெரிய அளவில் கஷ்டப்பட்டேன்.

நான் ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பி.டெக். படித்து பெற்ற அறிவோடு ஒப்பிடும்போது சென்னை ஐ.ஐ.டி.யில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

ஆப்கானிஸ்தானில் இது போன்ற ஒரு கல்வி முறையின் அவசியத்தை உணர்கிறேன். ஐ.ஐ.டி. உயர்தரத்தை எனது நாட்டுக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

என்னை தடுத்ததால் நான் இன்னொரு வழியை கண்டுபிடித்து விட்டேன். தலிபான்களை நினைத்து வருந்துகிறேன். அதிகாரம் இருப்பதால் ஆடுகிறார்கள் என்றார்.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் அந்நாட்டின் தாய் மொழியில் படித்த அவர் ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆன்லைன் வழியாக இன்றைக்கு எம்.டெக். தேர்ச்சி பெற்றது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

தற்போது அந்த மாணவி சரளமாக ஆங்கிலம் பேசுவதாக பேராசிரியர் ரகு தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, அந்த மாணவி இரவில் நான்கு, ஐந்து மணி நேரம் மட்டுமே ஓய்வெடுத்தார். மீதமுள்ள நேரத்தை கல்விக்குத் தான் செலவழித்தார் என கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!