வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது! நாளை புயலாகவும் வலுப்பெறும்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மே 10-ஆம் தேதி புயல் உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த புயலுக்கு ”மோக்கா” என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ் பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக மாறி வங்கதேசம்-மியான்மரை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், வட தமிழகக் கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

கடல்பகுதிகளில் புயல் உருவாகுவதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளின் நிலப்பரப்பில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும், அந்தவகையில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!