மருத்துவ கல்லூரியில் 63 வயதில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மூதாட்டி!

நம்மில் பலருக்கு டாக்டராக வேண்டும் எனற கனவு இருந்தாலும், அதற்கான தகுதி இருந்தால் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்து சேர்ந்து படிப்பதுடன் மருத்துவ சேவை செய்வதில் சாதிக்க முடியும்.

அதேநேரத்தில் படிப்புக்கு வயது தடை இல்லை என்பது பலரால் பல வகைகளில் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது.

அந்தவகையில் 63 வயதில் பெண் ஒருவர் காரைக்காலில் எம்.பி.பி.எஸ். படித்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

50 வயதாகி விட்டாலே பலர் ஓய்வை தேடும் இந்த காலத்தில், மக்களுக்கு சேவை செய்வதற்காக 63 வயதான சுஜாதா ஜடா, என்ற பெண், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.

படித்து வருவது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த ருசிகரம் குறித்த விவரம் வருமாறு:


மத்தியப்பிரதேச மாநிலம் அம்லா பகுதியைச் சேர்ந்தவர் வினோத் யாதவ் (66), இவர் பிரபல தொழிலதிபர். இவரது மனைவி சுஜாதா ஜடா (63). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இவர், மத்திய பிரதேசத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், ராணுவத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற சுஜாதா ஜடா, தேசிய வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார்.

எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் சுஜாதா ஜடா, ஓய்வு காலத்தை மக்களுக்கு சேவை செய்யும் வகையில் மாற்ற விரும்பினார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்தது டாக்டர் படிப்பு. அதற்கு முன்புபோல் மருத்துவக் கல்லூரியில் உடனே சேர்ந்து விட முடியாது என்பதால் நீட் தேர்வுக்கு தயாரானார்.

அதன் விளைவாக கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி சுஜாதா ஜடா வெற்றி பெற்றார். இதனை அடுத்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள விநாயகா மிஷின் மருத்துவக்கல்லூரியில் சுஜாதா ஜடாவிற்கு இடம் கிடைத்தது.

தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியாக சுஜாதா ஜடா கல்லூரியில் நுழைந்தார். வகுப்பறைக்கு சென்ற சுஜாதா ஜடாவை, கல்லூரி மாணவர்கள் புதிய பேராசிரியை என கருதி கைத்தட்டி வரவேற்றனர்.

ஆனால், சுஜாதா ஜடாவோ தனது இயல்பான புன்னகையில், நானும் உங்களைபோல் ஒரு மாணவிதான் என்றதும் முதலில் மாணவர்கள் நம்ப மறுத்தனர்.


பின்னர், மாணவிக்கான அடையாள அட்டையை அவர் காட்டியதும், சக மாணவர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். பெற்றோர் வயதில் ஒரு மாணவியா? என ஆச்சரியமாக இருந்தாலும், போகபோக சக மாணவியை போல், அனைவரும் அவருடன் பழகி வருகின்றனர்.

இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுஜாதா ஜடாவுக்கு வகுப்பு எடுக்கும் மருத்துவ பேராசிரியருக்கு வயது 48. தனது படிப்பு குறித்து சுஜாதா ஜடா கூறுகையில், ”ராணுவத்திலும், அதன்பிறகு வங்கியிலும் வேலை பார்த்தபோதிலும் எனது கவனம் மக்கள் சேவை என்பதே என்றிருக்கும்.

கல்வி கற்க எப்போதும் யாருக்கும் வயது தடையாக இருந்தது இல்லை. தன்னம்பிக்கை இருந்தால் போதும். தற்போது எனக்கு வயது 63 என்றாலும் அதை நான் எப்போதும் உணர்ந்தது இல்லை.

என் நோக்கமெல்லாம், மருத்துவமனையே இல்லாத எனது கிராமத்தில், சிறு மருத்துவமனை அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள்.

அதற்காகதான் முறைப்படி டாக்டருக்கு படித்து சேவை செய்ய உள்ளேன்” என்றார். சுஜாதா ஜடாவின் டாக்டர் கனவு நிறைவேற பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!