தமிழகத்தில் 10-ந்தேதி முதல் வெப்பம் மேலும் அதிகரிக்கும்- வானிலை இலாகா தகவல்!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது.

மே 28-ந்தேதி வரை அக்னி வெயில் நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயில் அதிகமாக கொளுத்தும். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோடை மழை பெய்து வருகிறது.

சென்னையிலும் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

இந்நிலையில் வங்கக் கடலில் வருகிற 7-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

இந்த புயலின் தாக்கம் முடிந்த பிறகு வருகிற 10-ந்தேதி முதல் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புயல் எச்சரிக்கை மைய இயக்குனர் பி.செந்தாமரைகண்ணா கூறியதாவது:- வங்கக்கடல் பகுதியில் வருகிற 6-ந்தேதி வளி மண்டலத்தில் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.

இதன் தாக்கத்தால் 7-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. 8-ந்தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பிறகு 9-ந்தேதி புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வடக்கே மத்திய வங்கக்கடலை நோக்கி நகரும்போது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதன் பாதை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச கடற்கரையை ஒட்டி இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை மழையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. எனவே மழை குறைய வாய்ப்புள்ளது.

இந்த புயலின் தாக்கமானது வங்கக் கடலில் நிலவி வரும் ஈரப்பதம் முழுவதையும் இழந்துவிடும். இதனால் வருகிற 10-ந்தேதி முதல் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!