நடிகை வனிதா விஜயகுமாரின் கணவர் பீட்டர் பால் திடீர் மரணம்!

தமிழகத்தில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விஸூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழும்பியது.

குறிப்பாக, பின்னர் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தனது கணவர் பீட்டர் பால் திருமணம் செய்து கொண்டார் எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

மேலும் பீட்டர் பால் மது போதைக்கு அடிமையானவர், பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது எனப் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

எனினும் அதனை பற்றியெல்லாம் கவலைபடாமல், நடிகை வனிதா திருமணம் முடிந்தவுடன் கணவர் பீட்டர் பால் உடன் கோவாவுக்கு தேனிலவு சென்றார். அங்கு தம்பதிக்கு இடையே சில சிக்கல்கள் ஏற்பட்ட காரணத்தினால் பீட்டர் பாலை வனிதா வீட்டை விட்டு வெளியேற்றியதாகத் தகவல்கள் வெளியாகின.

அதன் பின்னர் கண்ணீர் மல்க வனிதா விஜயகுமார் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், என்னையும் எனது மகள்களையும் கவனித்துக் கொள்வதற்கு ஒரு ஆதரவான ஆண் தோழரைத் தேடி வந்தேன்.

இதனால் தான் நான் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டேன். அவருக்கு இதயத்தில் கோளாறு இருந்தது அதன் காரணமாக ஓரிருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது புகைப்பிடிக்கும் பழக்கம் உடல் நலக் குறைவை அதிகரித்தது. அவர் குணமடைய சுமார் 15 லட்சம் ரூபாய் செலவிட வேண்டி இருந்தது. குடிபோதையின் காரணமாக அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறுவார். மக்களிடம் பணம் கேட்பார். ஒரு வாரம் முழுக்க மது மட்டுமே அருந்திக் கொண்டிருந்தார்.

சரியாக உணவு கூட எடுத்துக் கொள்ளவில்லை. திடீரென்று ஒரு நாள் அதிகாலை 4 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறினார். பல மணி நேரம் வீட்டிற்கு வராத அவரை ஒரு உதவியாளர் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

நான் அவரை எவ்வளவு நன்றாகக் கவனித்துக் கொண்டேன் என அவருக்குத் தெரியும். ஆனால் அவருக்கு என்னை விட மதுவின் மீது நேசம் அதிகம் எனத் தெரிந்து கொண்டேன்.

கோவா சென்று வந்த பிறகு அவரது சகோதரர் காலமானதாக அவருக்கு அழைப்பு வந்தது. அவர் வீட்டிற்குச் செல்வதற்காக செலவுக்கு நான் பணம் கொடுத்தேன்.

வீட்டிற்குச் சென்றவர் அப்படியே போய் விட்டார். அவரும் என்னை அழைக்கவில்லை. எனது அழைப்பையும் அவர் எடுக்கவில்லை எனத் தெரிவித்து இருந்தார்.

தற்போது பீட்டர் பால் காலமானதாகக் கூறப்படும் செய்தி அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் வனிதா விஜயகுமாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பலர் இது குறித்து தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.-News & image Credit: dinamaalai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!